Site icon அநேகன்

செமினி தொகுதியை கைப்பற்றியது தேசிய முன்னணி

செமினி, மார்ச் 2-

செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது உறுதியானது. அதிகாரப்பூர்வ தகவலின்படி தேசிய முன்னணியின் வேட்பாளர் சகாரியா ஹனாபி 19,780 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர் முகமட் ஐமான் ஜாய்னால் 17,866 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.  இது நடப்பு அரசாங்த்திற்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த 2008, 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் செமினி சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி தக்கவைத்துக் கொண்டது. ஆனால், கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அத்தொகுதியை நம்பிக்கை கூட்டணியிடம் இழந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அத்தொகுதியை கைப்பற்றி சாதனைப் படைத்திருக்கின்றது.

இதனிடையே, சுயேட்சையாக போட்டியிட்ட குவான் சீ 725 வாக்குகளையும் பிஎஸ்எம் கட்சியின் வேட்பாளர் நிக் அஸிஸ் 847 வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டனர்.

இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமது நோர் (வயது 57) கடந்த ஜனவரி 11ஆம் தேதி மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. 14ஆவது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் 6ஆவது இடைத்தேர்தல் இதுவாகும்.

கேமரன்மலை இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் கலந்து கொண்டதை போன்று டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இந்த செமினி இடைத்தேர்தல் பிரசாரத்திலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கேமரன்மலை இடைத்தேர்தலை தொடர்ந்து செமினி இடைத்தேர்தலிலும் தேசிய முன்னணி வெற்றி பெற்றதால் அதன் ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Exit mobile version