Site icon அநேகன்

மஇகா – மசீச நிலைப்பாட்டை தேசிய முன்னணி தலைமைத்துவம் உணர வேண்டும்! -நவீன் வேண்டுகோள்

சிரம்பான், மார்ச் 5-
மலேசியா சுதந்திரம் அடைவதற்கு ஒன்றிணைந்த இந்நாட்டின் முதன்மை மூன்று கட்சிகளான அம்னோ, மலேசிய இந்திய காங்கிரஸ், மலேசிய சீனர் சங்கம் ஆகிய கட்சிகளுக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிளவு என்பது மலேசியர்களை வெகுவாக பாதிக்கின்றது என மஇகாவின் நெகிரி செம்பிலான்  இளைஞர் பிரிவைச் சேர்ந்த  நவீந்திரன் கோவிந்தசாமி வருத்தம் தெரிவித்தார்.

இத்தனை ஆண்டு காலமாக ஒரே அணியின் கீழ் பயணித்த மஇகா-மசீச ஆகியவை தேசிய முன்னணி கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக வெளியிட்ட அறிக்கை மலேசிய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு கட்சிகளும் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதால் கூட்டமைப்பிற்கு எந்த பாதிப்பும் இல்லை என அதன் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ நஸ்ரி குறிப்பிட்டிருப்பது, ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து என்றும் அவர் சாடினார்.

உறுப்பு கட்சிகளுக்குள் ஏதேனும் பிரச்சனைகள் எழும் பொழுது தேசிய முன்னணி தலைமைத்துவம் ஒன்றுகூடி அதற்கான தீர்வை முன்னெடுக்க வேண்டியது தான் அவசியம். அதைவிடுத்து பிரச்சினையை வளர்க்கும் நடவடிக்கைகளை நஸ்ரி போன்ற தலைவர்கள் முன்னெடுக்கக் கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

டத்தோ ஸ்ரீ நஸ்ரி கூறிய கருத்து, தேசிய முன்னணியின் கருத்தாக இருக்காது என நான் நம்புகிறேன். இப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள் தான் மக்கள் மத்தியில் அம்னோவின் நிலைப்பாட்டை சீர்குலைக்கிறது. இந்த விவகாரம் குறித்து அம்னோவின் இதர தலைவர்கள் வாய் திறந்து பேச வேண்டும் என அவர் கூறினார்.

தேசிய முன்னணியின் தலைமைத்துவம் இந்த விவகாரத்தை மிக எளிமையாக எடுத்துக்கொள்ள கூடாது. நம் நாட்டின் அடையாளமாக விளங்கும் தேசிய முன்னணியின் கூட்டமைப்பை மீண்டும் எப்படி உருமாற்றம் செய்ய முடியும் என்பது குறித்து தான் சிந்திக்க வேண்டுமே தவிர, இத்தனை ஆண்டுகளாக ஒரே குடையின் கீழ் பயணித்த கட்சிகள் வெளியில் செல்வதற்கான வழி முறைகளை நாமே அமைத்து தரக்கூடாது என நவீன் கூறினார்.

தேசிய முன்னணியின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும் காலகட்டம் இது. இந்த அற்புதமான சூழ்நிலையில் நாம் ஏதேனும் தவறான முடிவுகளை எடுத்தால் மிகப் பெரிய பாதகத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அதனைக் கருத்தில் கொண்டு இப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம் என நவீன் தமது அறிக்கையில் கூறினார்.

 

 

(இது நவினின் தனிப்பட்ட கருத்து. மஇகாவின் நிலைப்பாடல்ல)

Exit mobile version