புத்ராஜெயா, மார்ச். 7-
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த டான் ஶ்ரீ அந்தஸ்துக் கொண்ட நபர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கோலாலம்பூரில், ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டம் தொடர்பில் மேல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அந்த டான் ஶ்ரீயுடன் மேலும் இருவர் கடந்த செவ்வாய்கிழமை முதல் தடுத்து வைக்கப்பட்டனர். இதில் டான் ஶ்ரீ அந்தஸ்து கொண்ட நபர் விடுவிக்கப்பட்ட வேளையில் அவரின் மகனும், தேவஸ்தானத்தை சேர்ந்த மற்றொரு நபரும் விசாரணைக்காக மேலும் ஒரு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை , அந்த டான் ஶ்ரீயின் வீட்டிலும், பத்துமலையில் உள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அலுவலகத்திலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் மேல் விசாரணைக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 16 ஆவது பிரிவு உட்பிரிவு ஏ -யின் கீழ் லஞ்சம் கேட்டது அல்லது கொடுத்ததற்காக அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

