பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்துமலை தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ நடராஜா, அவரது மகனும் தேவஸ்தான அரங்காவலருமான டத்தோ சிவகுமார் ஆகிய இருவரையும் ஆலய பொருப்புகளிலிருந்து இன்னும் 7 நாட்களுக்குள் நீக்கப்பட வேண்டும் என இந்து ஆகம அணி வலியுறுத்தி கேட்டுக் கொண்டது.
இவ்விவகாரம் தொடர்பில் நேற்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள உணவகம் ஒன்றில் இந்து ஆகம அணியினர் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தை நடத்தினர்.
இக்கூட்டத்தில் ஆகம அணியின் நிர்வாகிகள் அருண் துரைசாமி, ரவி துரைசாமி, அணியின் சட்ட ஆலோசகர் திருகுமார் வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டு விவகாரம் தொடர்பில் விவரித்தினர்.
அண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நில விவகாரம் தொடர்பில் டான்ஶ்ரீ நடராஜா இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் பெரும் மதிப்பில் ரொக்க பணமும் பொருட்களும் நகைகளும் சிக்கியுள்ளது என தெரிகிறது. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இச்சம்பத்தின் புகைப்படங்களே அதற்கு சாட்சி.
இந்த சோதனையை அடுத்து டான்ஶ்ரீ நடராஜாவும் அவரது மகன் டத்தோ சிவகுமாரும் ஆனையத்தால் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பெரும் ஆலய தேவஸ்தான தலைவர் மற்றும் அறங்காவலர் பொருப்பில் இருக்கும் இவ்விருவரும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளதால் அவர்களை இன்று தொடங்கி ( மார்ச் 6ஆம் தேதி) இன்னும் 7 நாட்களுக்குள் ஆலய பொருப்புகளிருந்து நீக்கப்பட வேண்டும்.
அவர்கள் மட்டுமல்லாது தேவஸ்தான இதர உறுப்பினர்களான கிருஷ்ண மூர்த்தி வையாபுரி (7 நாட்களுக்குள்), அழகன் பெரியசாமி (7 நாட்களுக்குள்), ஹரிதாஸ் சுப்பையா, வேலுகோபால் முனுசாமி, ராமன் காளிமுத்து, சுப்ரமணியம் ரத்தினம் ஆகியோரையும் 1930- 2017 நீதிமன்ற உத்திரவின் படி ஆலய பொறுப்புகளிருந்து நீக்கப்பட வேண்டும். இந்த முடிவுகளை முன்னெடுக்க தேவஸ்தானம் உடனடியாக அவசர பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டுமென அருண் துரைசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் தேவஸ்தானத்தின் உறுப்பினர்கள் & அறங்காவலர்கள் அனைவரும் உடனடியாக தங்களின் பதவியிலிருந்து (23 உபயக்கார குடும்பங்கள்) விலக வேண்டும். இதன் வழி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக குழுவை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த தேர்தல் சட்டத்திற்கும் ஆகமத்திற்கும் உட்பட்டு நடத்தப்பட வேண்டும்.
தேவஸ்தான நிர்வாக பதவிகளுக்கு போட்டியிடும் நபர்கள் எந்தவொறு ஒளிவு மறைவுமின்றி மக்கள் மத்தியில் களம் இறங்க வேண்டும். குறிப்பாக அவர்கள் ஒழுக்க மிக்கவர்களாகவுக் ஆகம – சமய செயல்பாடுகளையும் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
இம்முறை நடத்தப்படும் தேர்தலில் மலேசிய குடியுரிமை கொண்ட இந்து மக்கள் அனைவரும் வாக்களிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக இந்து ஆகம அணியை சேர்ந்த நாங்கள் இந்த தேவஸ்தான நிர்வாக பதவிகளை குறி வைத்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இருந்த போதும் நேர்மையான புதிய நிர்வாகத்தை தேர்தெடுக்கும் செயல்முறைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என்றும் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் ஆகம அணியினர் தெளிவுப்படுத்தினர்.
இதற்கிடையே, கோத்தா டாமான்சாரா பகுதியில் டான்ஶ்ரீ நடராஜா கட்டியுள்ள வீட்டில் சுமார் 4,000 சதுர அடி கொண்ட பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் கடந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதியன்று பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழத் புகார் செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இவ்வருடம் ஜனவரி 3ஆம் தேதியன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. பொது நிலத்தை அவர் ஆக்கிரமித்து வீடு கட்டுயுள்ளதற்கான சாட்சிகளும் ஆவணங்களும் கைவசம் உள்ளது.
ஆகவே சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமினூடீனும் டத்தோ பண்டாரும் உடனடியாக அவ்வீட்டை முடக்கி பொது நிலத்தில் கட்டப்பட்டுள்ள பகுதிகளை உடைக்க வேண்டும் எனவும் ஆகம அணியினர் கேட்டுக் கொண்டனர்.

