கோலாலம்பூர், மார்ச் 9
தேசிய முன்னணி தொடர்ந்து செயல்படுவதற்கு அதன் உச்சமன்றம் எடுத்துள்ள முடிவிற்கு தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர் .
60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் தேசிய முன்னணி தொடர்ந்து செயல்படுவதற்கு அக்கட்சியின் தலைமைத்துவம் எடுத்துள்ள முடிவு மிகவும் வேகமானது என்பதோடு ஆக்கபூர்வமானது என வீரன் சுட்டிக் காட்டினார்
தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளின் தலைவர் ஒருவர் இனத்துவேச பாணியில் பேசினார் என்பதற்காவோ அல்லது கடந்த பொதுத் தேர்தலில் அந்தக் கூட்டணி தோல்வி கண்டதால் கூட்டரசு அரசாங்கத்தின் அதிகாரத்தை இழந்துவிட்டது என்பதற்காகவோ அந்த வரலாற்றுப் பெருமை வாய்ந்த கூட்டணியை கலைப்பது நியாயமான செயல் அல்ல என மஇகா மத்திய செயலவை உறுப்பினர் வீரன் தெரிவித்தார்.
எனினும் தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்தில் தேசிய முன்னணியை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கும் அதன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முடிவு செய்திருப்பது குறித்து தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக வீரன் கூறினார்.
நாட்டின் மூவின மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது . இது தவிர நாட்டை சிறப்பாக மேம்படுத்துவதிலும் தேசிய முன்னணி கூட்டணி அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக மற்றும் அதன் உறுப்புக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களில் சிலர் இனத்துவேச பாணியில் பேசுகிறார்கள் என்பதற்காக பல ஆண்டுகளாக நீடித்து வந்த அந்த கூட்டணியை கலைப்பதும் சிறந்த தீர்வாக அமையாது.
இந்த வேளையில் தேசிய முன்னணி உச்சமன்றம் சரியான நேரத்தில் பொருத்தமான முடிவு எடுத்திருப்பது மிகவும் விவேகமான ஒன்று என வீரன் வருணித்தார்.
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான மஇகாவின் சார்பில் டத்தோ டாக்டர் சுப்ரமணியம் அமைச்சரவையில் இந்திய சமுகத்தின் ஒரே அமைச்சராக இருந்தபோது இந்தியாவிற்கான விசா கட்டண உயர்வு பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு கண்டார். ஆனால் இப்போது அமைச்சரவையில் 4 இந்திய அமைச்சர்கள் இருந்தபோதிலும் விசா பிரச்சனைக்கு கூட அவர்களால் இன்னும் முழுமையாக தீர்வு காணமுடியவில்லை.
இது மட்டுமல்ல இந்திய சமூகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அவர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையிலும் ஈடுபடமுடியாமல் இருக்கிறார்கள். எனவே தேசிய முன்னணி கோட்பாடுதான் இந்திய சமூகத்தின் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு காணக் கூடியதாக இருக்க முடியும் என வீரன் வலியுறுத்தினார்.
இதனிடையே தேசிய முன்னணியை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு தேசிய முன்னணி உச்ச மன்றம் எடுத்துள்ள முடிவு சிறந்தது என பேரா மஇகா செயலாளர் புலிகேசி தெரிவித்தார்.
மலேசியாவில் தற்போது மாறுபட்ட அரசியல் சூழ்நிலை ஏற்பட்டு இருந்தாலும் இந்த நிலை அடுத்த 5 ஆண்டுகளில் மாறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் தேசிய முன்னணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக புலிகேசி தெரிவித்தார்.
மலேசிய மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் தேசிய முன்னணி ஆற்றிய பங்கை மறந்துவிட முடியாது. தேசிய முன்னணியின் தலைவர்கள் எல்லா காலகட்டத்திலும் நாட்டின் நலன்கள், அரசியல் நிலைத்தன்மையை காக்கவும் மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கும் கடுமையாக பாடுபட்டுள்ளனர். அவர்களின் சேவையை நாம் எந்த வேளையிலும் றமறந்துவிடக் கூடாது என புலிகேசி சுட்டிக் காட்டினார்.
ஜனநாயகத்தில் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதும் மற்றொரு கட்சி தோல்வியைத் தழுவுவதும் புதிய அரசாங்கத்திற்கு தலைமை ஏற்பது இயல்பான ஒன்றாகும் அதைப்போலவே அரசாங்கத்திற்கு தலைமையேற்ற ஒரு கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்படுவதும், எதிர்க்கட்சியாக ஒரு இருக்கும் கட்சி ஆளும் கட்சியாக வருவதும் இயல்பான ஒன்றாகும்.
60 ஆண்டுகளுக்கு பிறகு மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த ஜனநாயக நடைமுறையை மலேசியர்கள் குறிப்பாக தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும். அதன் தலைவர்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசிய முன்னணி தற்போது கூட்டரசு அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும் சிறந்த எதிர்க்கட்சியாக தன்னை உருவாக்கிக் கொண்டு அந்த இலக்கை நோக்கி அதன் பயணம் இருக்க வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையை புரிந்து கொண்டால் தேசிய முன்னணி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான நடவடிக்கையில் நாம் செயல்பட முடியும். மக்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு இருக்கிறது என்பதை கேமரன் மலை மற்றும் செமினி இடைத் தேர்தலில் நிரூபனமாகியுள்ளது. ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் தேசிய முன்னணிக்கான ஆதரவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேசிய முன்னணிக்கு மீதான நம்பிக்கையை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதற்கான துரித நடவடிக்கையில் உறுப்பு கட்சிகளான அம்னோ,ம.சீ.ச ஈடுபடவேண்டும் .இந்த முயற்சியில் நாம் வெற்றி பெற்றால் தேசிய முன்னணி மீண்டும் ஆளும்கட்சியாக திகழ முடியும் என புலிகேசி நம்பிக்கை தெரிவித்தார்.

