Site icon அநேகன்

ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தல்; டாக்டர் ஸ்ரீராம் போட்டி

கோலாலம்பூர், மார்ச் 11-

ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் சார்பில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீராம் போட்டியிடுவார் என்று பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்

பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் இதனை அறிவித்தார்.

ரந்தாவ் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி நடைபெறும். ரொம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் 27 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் உள்ளனர். அந்த அடிப்படையில்  இங்கு இந்திய சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்த என பிகேஆர் முடிவு செய்ததாக அன்வார் தெரிவித்தார்.

ஏற்கனவே இதர இடங்களில் இந்தியர் அல்லாத வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில்  இதற்கு முன் இந்தியர்கள் போட்டியிட்டனர். அண்மையில் அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நான்  போட்டியிட்டேன்.  அனைத்து  இனங்களின் நலன்களையும்  கருத்தில் கொண்டு ரந்தாவ் தொகுதியில் வேட்பாளராக மீண்டும் டாக்டர் ஸ்ரீராம் சின்னசாமி களம் இறக்கப்பட்டிருப்பதாக அன்வார் தெரிவித்தார்.

வேட்பாளரை பரிசீலித்தபோது  கட்சியில் அவர்களது ஈடுபாடு, அவர்களின் செயல் நடவடிக்கை, அவர்களது தியாகம் ஆகியவையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1988 ஆம் ஆண்டு ரிபார்மசி இயக்கம் தொடங்கப்பட்ட போது அதில் அவர்கள் ஆற்றிய பணி பிறகு பி கே ஆர் உருவாக்கப்பட்ட போது அவர்களது அரசியல் நடவடிக்கை போன்ற அம்சங்களும் வேட்பாளர் தேர்வில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலும் கல்வி பின்னணியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட தாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 14வது பொதுத் தேர்தலின்போது ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான உரிமை டாக்டர் ஸ்ரீராமுக்கு மறுக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் முடிவுக்கு ஏற்ப அந்த தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.

அத்தொகுதியில் டாக்டர் ஸ்ரீராம் வேட்பாளராக நிலைநிறுத்தப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே நம்பிக்கை கூட்டணியின் தலைவர் டாக்டர் மகாதீர் தலைமையில் கூட்டம் நடத்தினோம். அந்தக் கூட்டத்திலும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முடிவு  காணப்பட்டது.

அதோடு ரந்தாவ் தொகுதி தலைவர் தங்கம் தலைமையிலும் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நெகிரி செம்பிலான் மந்திரி புசார்  கலந்து கொண்டு வேட்பாளர் விவகாரத்தில் இணக்கமான முடிவு காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version