Site icon அநேகன்

எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த மாணவியாக திவ்ய ஜனனி தேர்வு

தானா மேரா, மார்ச் 12-

2018ஆம் ஆண்டின் எஸ்டிபிஎம் தேர்வில் 5ஏ பெற்ற திவ்ய ஜனனி மலேசியாவின் சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிளாந்தான், கெரில்லா தோட்டத்தை சேர்ந்த திவ்ய ஜனனி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அதே தோட்டத்தில் அவரது தந்தையான மாரியப்பன் குத்தகையாளராக பணிப்புரிகிறார். அவரது தாயார் முனியம்மா பால்மரம் வெட்டும் வேலை செய்து வருகிறார்.

குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான திவ்ய ஜனனி தனது பெற்றோரின் ஊக்குவிப்பினாலும் விடாமுயற்சினாலும் இந்த சிறந்த அடைவுநிலையை பெற்றதாக அநேகனுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

சில மாணவர்கள் தங்களது குடும்ப நிலைமை வைத்து படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், தனது குடும்பத்தில் நிதி நெருக்கடி பிரச்னை இருந்தாலும் தனது பெற்றோர் தன்னிடம் ஒருபோதும் காட்டிக் கொண்டதில்லை என்றும் அதனை கருத்தில் கொண்டே கடந்த ஒன்றரை ஆண்டு படிப்பில் முழு கவனம் செலுத்தியதாகவும் அவர் கூறினார்.

பள்ளியில் மட்டும் கூடுதல் வகுப்பிற்குச் சென்றதாகவும் தனியாக எந்தவொரு கூடுதல் வகுப்பிற்கும் (tuition) சென்றதில்லை என்றும் அவர் சொன்னார்.

பள்ளியில் படிக்கும் பாடங்களை அதிகம் மீள்பார்வை செய்யும் திவ்ய ஜனனி சமுக ஊடகங்களில் கவனம் செலுத்துவதில்லை என்று கூறினார். முயற்சி திருவினையாக்கும் என்பதை அதிகம் நினைவுக்கூறும் அவர் முழு நேரத்தை பாடங்களை மீள்பார்வை செய்வதிலும் பயிற்சிகள் செய்வதிலும் செலவிட்டதால் இந்த அடைவுநிலையை பெற முடிந்ததாக அவர் சொன்னார்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி கூறிய திவ்ய ஜனனி தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பல உதவிகள் செய்த தனது மாமா கோபிக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

எஸ்டிபிஎம் படிக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னர், இது கடினமான தேர்வு, எஸ்டிபிஎம் படிக்க வேண்டாம் என்று சிலர் எதிர்ப்பாக இருந்தனர். ஆனால், தன் மனதில் நினைத்ததை ஒருபோதும் பின்வாங்க வேண்டாம் என்றும் எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனவும் தனக்கு பெற்றோரரும் மாமாவும்தான் ஊக்குவிப்பு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கணக்காய்வாளராக வேண்டும் என்ற லட்சியம் கொண்டுள்ள திவ்ய ஜனனி மலாயா பல்கலைகழகத்தில் மேற்கல்வியை தொடர வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும் தெரிவித்தார்.

Exit mobile version