கோலாலம்பூர், மார்ச்.16-
தேசிய கணக்காய்வுக் குழுவுக்கு எதிர்கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே தலைமை ஏற்க வேண்டும் என சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹான்னா யோவும், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வாரும் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய கணக்காய்வுக் குழுவின் நடப்பு தலைவர் டத்தோ ஶ்ரீ ரோனால்ட் கியான்டி, பிரிபூமி பெர்சத்து கட்சியில் இணைந்தப் பின்னரும் அவர் அப்பதவியில் தொடர்வார் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் வெள்ளிக்கிழமை அறிவித்திருப்பது இவ்விரண்டு நாடாளுமன்ற உறிப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கணக்காய்வுக் குழுவுக்கு எதிர்கட்சித் தலைவரே தலைமை ஏற்க வேண்டும் என்பதை நாடாளுமன்றம் கட்டாயமாக்க வேண்டும். அதற்கு தேவையான மாற்றங்களை முன்னெடுக்கவும் நாடாளுமன்றம் தயாராக இருக்க வேண்டும் என ஹன்னா யோ தெரிவித்தார்.
ஹன்னா யோவின் கருத்தை நூருல் இசாவும் ஆதரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் சபாநாயகர் உறுதியாக இருக்கிறார். அதில் தேசிய கணக்காய்வுக் குழுவும் ஒன்றாகும். இது குறித்து தாம் சபாநாயகருடன் கலந்து பேச விருப்பதாக நூருல் இசா கூறினார்.
தேசிய கணக்காய்வுக் குழுவுக்கு எதிர்கட்சியைச் சேர்ந்த ஒருவர் தலைமை ஏற்க வேண்டும் என்ற வாக்குறுதியை நம்பிக்கைக் கூட்டணி தமது தேர்தல் கொள்கை அறிக்கையில் இடம்பெற செய்திருந்தது குறிப்பிடதக்கது.

