புத்ராஜெயா, மார்ச்.16-
கொடுக்கப்பட்ட கடமைகளை முறையாக நிறைவேற்றத் தவறினால் அதற்காக அவமானப்படும் ஜப்பானியர்களின் போக்கை மலேசிய இளைய தலைமுறையினர் முன் மாதிரியாக கொள்ள வேண்டும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்துள்ளார்.
ஜப்பானியர்கள் தங்களுக்காகக் கொடுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தவறிவிட்டால், இயற்கையாகவே அவமான உணர்வைக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதனால்தான், இரண்டாம் உலகப்போரில் முழுமையாக அழிந்த ஜப்பான் நாடு, தற்போது உலக அளவில் மிகப் பொருளாதார சக்தியாக உருவெடுத்திருக்கிறது என மகாதீர் தெரிவித்தார்.
அதனால்தான் அரசாங்கம் தற்போது கிழக்கை நோக்கும் கொள்கையை மீண்டும் செயல்படுத்தி வருவதாக டாக்டர் மகாதீர் கூறினார். ஜப்பானியர்கள் கொண்டிருக்கும் சிறந்த பண்புகளை மலேசியர்களும் கொண்டிருந்தால் நாடு தொடர்ந்து வளர்ச்சிக் காண முடியும் என அவர் குறிப்பிட்டார்.
தேர்வுகளில் தோல்வி அடைந்தால் மட்டுமே, அவமானப்பட வேண்டியதில்லை. மாறாக மக்களுக்குச் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை செய்யத் தவறினாலும், அவமானப்படக் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இம்மாதிரியான உணர்வுகளோடு, நாட்டின் அடுத்த தலைமுறையினர், விடாமுயற்சியுடன் செயல்பட்டால், 2025-க்குள் வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் இடம் பெறுவதற்காக அரசாங்கத்தின் திட்டம் சுமுகமாக நிறைவேறும் என பிரதமர் கூறினார்.

