கோலாலம்பூர், ஜூலை 27-
கெராக்கானில் இணைவதாக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு தலைவர் அல்லது உறுப்பினரிடமிருந்தும் கட்சி விண்ணப்பம் எதனையும் பெறவில்லை என்று இக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் தெரிவித்தார்.
பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி கெராக்கானில் இணைவது தொடர்பில் பிகேஆர் கட்சியுடன் தாங்கள் இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சு நடத்தியது கிடையாது என்று டோமினிக் லாவ் குறிப்பிட்டார்.
எனினும், கெராக்கானுக்கும் பிகேஆர் தலைவருக்குமிடையே அதிகாரப்பூர்வமற்ற கலந்துரையாடல்கள் நடந்திருப்பதை அவர் ஒப்புக் கொண்டார். “அவர்கள் அஸ்மினை ஆதரிக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. அதே சமயம், கெராக்கானில் இவர் இணையவிருப்பதாக வதந்தி பரப்பப்பட்டது அந்த ஆபாச காணொளி சம்பவத்திற்கு முன்னரே” என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“கெராக்கான் கட்சியின் கொள்கை, மக்களின் உரிமைகளுக்கான இதன் போராட்டம் மற்றும் நமது நாட்டை முன்னேற்றகரமான நாடாக உருவாக்குவதில் கொண்டுள்ள கடப்பாடு ஆகியவற்றை ஏற்றுக் கொள்பவர்கள் இக்கட்சியில் தாராளமாகச் சேரலாம் ” என்றார் அவர்.
கெராக்கான் பல்லின மக்களைக் கொண்ட ஒரு கட்சி. நாம் அனைவரும் மலேசியர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறோம். மலேசிய பிரஜைகள் எனும் வகையில் நமக்கு உரிமை உள்ளது என்பதே இதன் பொருள் என்றார். கெராக்கான் பக்காத்தான் ஹராப்பானில் இணையும் சாத்தியம் குறித்த கேள்விக்கு டோமினிக் லாவ் கருத்துரைக்க மறுத்தார்.

