Site icon அநேகன்

”மலாயாப் புலியை பாதுகாப்போம்” பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார் துன் டாக்டர் சித்தி அஸ்மா!

புத்ராஜெயா ஜூலை 29-

மலேசியாவில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக விளங்கும் ”மலாயாப் புலியை பாதுகாப்போம்” என்ற பிரச்சாரத்தை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அவர்களின் துணைவியார் துன் டாக்டர் சித்தி அஸ்மா தொடக்கி வைத்தார்.

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. இதர உயிரினங்களையும் இறைவன்தான் படைத்தார். அவைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என இந்த பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 1950ஆம் ஆண்டில்  மலேசியாவில் கிட்டத்தட்ட 3000 மலாயாப் புலிகள் இருந்தன. இப்போது அதன் எண்ணிக்கை வெறும் 200ஐ தொட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் மலாயாப் புலிகள் அழிந்த உயிரினங்களின் பட்டியலில் இடம் பிடித்து விடும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

The prime minister’s wife, Dr Siti Hasmah Mohd Ali, has made an urgent appeal to the government, the private sector and citizens to work together to protect and support conservation efforts of the endangered Malayan tiger.

மலேசியாவின் அடையாளமாக விளங்கும் மலாயாப் புலியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மலேசியர்கள் அனைவருக்கும் உண்டு. தற்போது இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாருக்கும் தாம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் துன் டாக்டர் சித்தி அஸ்மா குறிப்பிட்டார்.

மலாயாப் புலியை பாதுகாக்கும் இந்தப் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும். மலையாப் புலியின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இந்தப் பிரச்சாரம் பெரிதும் துணை புரியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். அதோடு அண்மையில் தாமான் நெகாரா வில் உள்ள மலையா புலி மூன்று குட்டிகளை ஈன்றெடுத்தது தமக்கு எண்ணற்ற மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இரண்டு ஆண் புலிகளுக்கு வீரா, ஹேபார்ட் என தாம் பெயர் சூட்டி உள்ள நிலையில் பெண் புலிக்கு மேலோர் என பெயர் வைத்திருப்பதாகவும் துன் சித்தி அஸ்மா கூறிய போது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

முன்னதாக 2010ஆம் ஆண்டு முதல் உலகளாவிய புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருவதாக நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஜூலை 29 ஆம் நாள் உலகளாவிய புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக நாடுகள் புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை கொண்டிருப்பதாகவும் 2022க்குள் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் முடிவு செய்திருப்பதையும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார். சட்டவிரோதமாக வேட்டையாடியதன் காரணமாக மலாயா புலியின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது.

இப்போது அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை நாம் எடுக்கத் தவறினால் மலேசியாவின் அடையாளமாக விளங்கும் புலியை காலப்போக்கில் நாம் இழந்து விடுவோம் என்பதையும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் நினைவுறுத்தினார். இதனைக் கருத்தில் கொண்டு மலாயாப் புலியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பகாங் மாநிலத்தில் 80 ஏக்கர் நிலப்பரப்பில் தேசிய புலிகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு இருப்பதையும் டாக்டர் சேவியர் தெரிவித்தார்.

முன்னதாக மலாயா புலியைப் பாதுகாப்பதற்காக புதிய நிதி திட்டமிடல் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆதரவு கரம் நீட்டிய அனைத்து இயக்கங்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் அறிமுக விழாவில் மட்டுமே 13 லட்சத்து 44 ஆயிரத்து 800 வெள்ளி திரட்டப்பட்டது. இந்த தொடக்க விழாவில் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸிசாவும் கலந்து கொண்டார்.

Exit mobile version