Site icon அநேகன்

ஜெயபக்தி பதிப்பகத்தின் ஏற்பாட்டில் யூபிஎஸ்ஆர் பயிற்சிப்பட்டறை!

கோலாலம்பூர் ஜூலை 29-

ஜெயபக்தி பதிப்பகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற யூபிஎஸ்ஆர் ஜெயபக்தி மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. சனிக்கிழமை நடைபெற்ற இந்த பயிற்சிப் பட்டறை காலை 8.30 தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் சுமார் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களான பகாங், பேரா போன்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் இப்பட்டறையில் கலந்து கொண்டு பயனடைந்தனர். அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இப்பட்டறையில் உயர்நிலைச் சிந்தனைத் திறன் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அணுகுமுறை, கேள்விகளுக்கு விரைவாகவும் சரியாகவும் பதிலளிக்கும் ரகசிய நுட்பங்கள், தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகள், சிந்தனை ஆற்றலை மேம்படுத்தும் யுக்திகள், நம்பிக்கை தூண்டல் என பல அங்கங்கள் இடம்பெற்றன.

தன்னலம் கருதாது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல நல்ல காரியங்களை செய்து வரும் ஜெயபக்திகுயில் உரிமையாளர் டத்தோ டாக்டர் செல்வராஜூ குத்துவிளக்கேற்றி பட்டறையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். முயற்சி ஒன்றே வெற்றி இமயத்தின் ஏணிப்படிகள். ஆகவே மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்ய வேண்டும் என அவர் தமது சிறப்புரையில் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் ஏற்றமிகு எதிர்காலத்திற்கு கல்வி ஒன்றே துணையாக இருக்க முடியும். கல்வி கற்ற சமுதாயமாக நாம் உருமாறும்போது அனைத்து நிலைகளிலும் நாம் மேம்படுவோம். தொடக்கத்தில் நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அந்த பாதையின் முடிவு தான் நமது எதிர்காலம். சிறந்த எதிர்காலத்தை அடைய நல்ல பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மூன்று வேளை உணவு பாடக்குறிப்புகள் நற்சான்றிதழ்கள் போன்றவைகள் வழங்கப்பட்டன.

Exit mobile version