கோலாலம்பூர், ஜூலை.31–
நாட்டின் 16 ஆவது மாமன்னராக நேற்று செவ்வாய்க்கிழமை அரியணை அமர்ந்த, மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தாபா பில்லா ஷாவுக்கும் பேரரசியார் துங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனா இஸ்காண்டாரியாவுக்கும் மேலவை இன்று தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.
சுல்தான் அப்துல்லாவின் பிறந்த நாளிலேயே, முழு மலாய் அரச சம்பிரதாயப்படி அதிகாரப்பூர்வ சடங்கில், நாட்டின் 16 ஆவது மாமன்னராக அரியணை அமர்ந்த வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என்று மேலவை உறுப்பினர்கள் சார்பில் ஆற்றிய வாழ்த்துரையில், மேலவைத் தலைவர் , டான் ஶ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் கூறினார்.
அந்த அதிகாரப்பூர்வ சடங்கின்போது உரையாற்றிய சுல்தான் அப்துல்லா, நாட்டின் அனைத்து மக்கள், இனம் மற்றும் மதங்களுக்கு இடையிலான சகிப்புத்தன்மையையும் ஒற்றுமையையும் காத்து, ஊழலை எதிர்த்து அரசியலமைப்பின் மேன்மையைப் பேணிக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை, மேலவை உறுப்பினர்களும் கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
அதோடு, மாமன்னர் தம்பதியினர் நீண்ட ஆயுளுடன் சிறந்த நல்லாட்சியை வழங்க வேண்டும் என்று தாம் இறைவனிடம் பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.

