பினாங்கு ஆக 1.
அபாய வேளைகளில் நம்மை தற்காத்துக் கொள்ளும் அதே வேளையில் பிற உயிர்களையும் அழிவுகளையும் காப்பாற்றுவதற்கு வகை செய்யும் உத்திகளை பினாங்கு மாநில மாநகராண்மைக் கழக உறுப்பினராக செயல்பட்டு வரும் ஆர்.காளியப்பன் இங்கு செய்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளித்து உதவினார்.
தீ விபத்து நிகழக்கூடிய சந்தர்ப்பங்களில் தீயணைப்புக் கருவியை இயக்கும் வழிமுறை, திடீர் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் விதத்தில் உதவுதல் போன்ற பயிற்சிகளை அனைவரும் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இவர் அவற்றுக்கான விளக்கங்களையும் வழங்கி சமூகப் பங்காற்றினார்.
பினாங்கு ஆயர் ஈத்தாம் வட்டாரத்தில் அமைந்திருக்கும் பாடாங் தேம்பாக் தொடக்கப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற இவற்றுக்கான பயிற்சி விளக்கங்களில் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்றத் தொகுதியில் அங்கம் வகிக்கும் 4 சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த 62 சமூகப் பாதுகாப்பு மன்றப் பிரதிநிதிகளும் வட்டாரப் பொது மக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் பிரதான ஆதரவை வழங்கிய வேளையில், மாநில தீயணைப்பு வீரர்களுடன் கெபுன் பூங்கா சட்டமன்ற தரப்பும், வட்டார கிராமியத் தலைவர் ஹிஸர் ஓமார் ஆகியோரும் தத்தம் பங்களிப்பாக வேண்டிய உதவிகளை வழங்கி, சமூக உணர்வை செவ்வனே மெய்ப்பித்தனர்.
சட்டமன்றத் தொகுதிகளின் கீழ் செயல்படும் சமூகப் பாதுகாப்பு மன்ற உறுப்பினர்கள் ஆபத்து வேளைகளில் பொது மக்களுக்கு உடனடியாக உதவுவதற்கு இத்தகையப் பயிற்சிகளைக் கற்றுக் கொள்வது மிகவும் அவசியமென்றும்,இது குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் பொது மக்களாகிய அனைத்து தரப்பினருக்கும் இருத்தல் வேண்டுமென்று காளியப்பன் இந்நிகழ்ச்சியில் ஆற்றிய தொடக்கவுரையின் போது வலியுறுத்தினார்.
அபாய வேளைகளில் விரைவான செயல்பாடுகளும் விவேக நடவடிக்கைகளும் நிகழவிருக்கும் பேரழிவுகளை முன்னதாக தவிர்க்க முடியுமென்பதால், பிறருக்கு உதவும் வழிமுறைகளை கற்றறிவது மிகுந்த பயன் தருமென்றும் வேண்டுகோள் விடுத்த காளியப்பன் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைத்து தரப்பினரும் நன்றி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

