கோலாலம்பூர், ஆக 3-
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி புறக்கணிக்கப்படுவதாக ஊடகங்களில் உலா வரும் செய்தி கற்பனைக்கெட்டாதது; கடுகளவும் உண்மை இல்லாதது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இணைய ஊடகங்களிலும் இப்படிப்பட்ட செய்தி வெளிவருவது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான களப்பிரச்சாரம் தற்பொழுது கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் இதேநேரத்-தில் நாடாளுமன்றத்திலும் மிகமுக்கியமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தேசிய புதிய கல்விக் கொள்கை, இஸ்லாமிய மணவிலக்கு(தலாக்)ச் சட்டம் குறித்தெல்லாம் கடுமையாக விவாதம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரான டி.ஆர்.பாலுவுக்கும் வேலூரில் தேர்தல் பணி கொடுக்கப்பட்டுள்ளதால் துணைத் தலைவரான கனிமொழி தலைமையில் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக ஆ.இராசா, கலாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்க பாண்டியன், மேலவையில் திருச்சி சிவா உள்ளிட்ட அனைவரும் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்று வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக பொருளாளரும் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தையுமான துரைமுருகன், டி.ஆ.பாலு ஆகியோரின் ஒருமித்த கருத்தினக்க அடிப்படையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை வழிநடத்தும் செம்மாந்த பணியை கனிமொழி ஆற்றிவருவதுடன், தலாக் சட்ட அமலாக்கத்தில் நாடாளுமன்ற ஒருவிதாமாகவும் நாடாளுமன்ற மேலவையில் வேறு விதமாகவும் பேசியதுடன் அன்றி, பாஜக அரசுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் வகையில் நாடாளுமன்ற் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தலாக் சட்ட நிறைவேற்றாத்திற்கு மறைமுகமாக துணை நின்ற அதிமுகவை கனிமொழி கடுமையாக சாடியதை நாடும் உலகும் அறியும்.
இப்படிப்பட்ட நிலையில், கழகத்தில் சிண்டு முடியும் வேலை எல்லாம் இனி ஒருகாலும் எடுபடாது என்று நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தொலைபேசிவழி தெரிவித்தார்.

