Site icon அநேகன்

நல்லவர்கள் அடையாளம் காணப்படுவதில்லை -அமைச்சர் வேதமூர்த்தி

சிரம்பான், ஆக. 6-

பிரதிபலனை எதிர்பாராமல் கடப்பாட்டு உணர்வுடன் தொண்டாற்றும் நல்லவர்கள் சமூகத்தில் அடையாளம் காணப்படுவதில்லை. அரசாங்கத்தின் கண்களுக்கும் அவர்கள் புலப்படுவதில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் இந்தியப் பட்டதாரிகள் கழகத்தின் இருபதாம் ஆண்டு நிறைவு விழாவில கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய அமைச்சர், இந்திய சமுதாயத்தில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ள நெகிரி செம்பிலான் இந்தியப் பட்டதாரிகள் கழகத்தின் பொறுப்பாளர்களுக்கு இந்திய சமுதாயம் நன்றிக்கடன் பட்டுள்ளது என்றார்.

யாருடைய உதவியும் இன்றி சொந்த முயற்சியாலும் சமூகத்தின்மீது கொண்ட அக்கறையாலும்  நெகிரி செம்பிலான் இந்தியப் பட்டதாரிகள் கழகத்தின் தலைவர் முனைவர் பழனி முத்துசாமி, பொருளாளர் கருப்பையா உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்களையும் இந்திய சமுதாயத்தின் சார்பாக  பாராட்டுவதாகத் தெரிவித்த அமைச்சர், இந்த இயக்கத்தினரை மித்ரா அடையாளம் கண்டு கல்வி வளர்ச்சி நிதி அளித்துள்ளது என்றார்.

எஸ்.பி.எம். முடித்த மாணவர்கள் எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று, அடுத்தக்கட்டமாக பல்கலைக்கழக நுழைவிற்கு எளிதாக தயராவதற்குரிய பணியை இந்த இயக்கம் கடந்த இருபது ஆண்டுகளாக ஆற்றி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தப் பணியை நெகிரி செம்பிலான் மாநிலத்தைக் கடந்து சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா, மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்களுக்கும் நீட்டிக்கும்படி இந்த அமைப்பினரைக் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சிரம்பான் நகராண்மைக் கழக மண்டபத்தில் ஆகஸ்ட் 4, ஞாயிற்றுக்கிழமை முன்னிரவில் ‘பட்டதாரிகள் நிதி தொடக்க விழா’வும் ஒருசேர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசுகையில் இந்திய சமுதாயம் உயர்வதற்கான ஒரேவழி கல்வி மேம்பாடு ஒன்றுதான் என்றார்.

அதுவும் நான்காவது தொழில் புரட்சியை எதிர்கொள்ளும் வகையில் இந்திய உயர்கல்வி மாணவர்கள், வெறும் கல்வியில் மட்டும் அக்கறைக் காட்டாமல், தொழில்நுட்பக் கல்வியிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆயிரக் கணக்கான மாணவர்களும் பெற்றோரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள்குமார் ஆகிய மக்கள் பிரதிநிதிகளுடன் துங்கு அஸ்லான் துங்கு டத்தோஸ்ரீ கமீல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version