Site icon அநேகன்

பத்துமலை இந்தியர் கலாச்சார மையத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!

கோலாலம்பூர் ஆகஸ்ட் 8-

பத்துமலை இந்தியர் கலாச்சார மையம் 30 மில்லியன் பெறுமானமுள்ள மிகப்பெரிய மேம்பாட்டுத் திட்டமாகும். இத்திட்டம் ஒரு பெரிய கலாச்சார மையமும் பல்நோக்கு மண்டபமும் உள்ளடக்கியதாக இருக்கும். இருப்பினும் இத்திட்டம் நீண்ட கால தாமதத்தை எதிர்நோக்கி வருகிறது.

இந்தியப் பாரம்பரியம், கலை கலாச்சாரம், ஹிந்து சமயம் மற்றும் இந்தியர் வரலாற்றை பதிவு செய்து காட்சிப்படுத்தும் நோக்கத்தோடு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் உருவாக்கம் பெற்றால் பத்துமலையின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மாற்றியமைக்கும்.

இந்த மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்திற்கு செலாயாங் நகராண்மைக்கழகமே முழுக்காரணம் என்று இத்திட்டத்தை முன்னெடுக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் குற்றம் சாட்டுகிறது.

இவ்வாண்டு தைப்பூசத்தின் போது பத்துமலைக்கு வருகையளித்த சிலாங்கூர் மாநில முதலமைச்சர் அமிருடின் ஸாரி, இத்திட்டத்திற்கான ஒப்புதல்களை விரைவில் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார் என்று தேவஸ்தானத்தின்  பொதுத் தொடர்பு வியூக இயக்குனர் திரு. சிவக்குமார் கூறினார்.

3000 பேர் அமரக்கூடிய மண்டபத்தையும், ஒரு இரத்த சுத்திகரிப்பு மையத்தையும் மற்றும் கடை வரிசைகளையும் உள்ளடக்கிய இத்திட்டம் குறித்து செலாயாங் நகராண்மைக்கழகத் தலைவருடன் தாம் பேசவிருப்பதாக முதலமைச்சர் கூறியதாகவும் திரு. சிவக்குமார் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தோடு கேபிள் கார் திட்டமும் நிறைவேறினால் மிகவும் சிறப்பாக அமையும். இதன்வழி பத்துமலைக்கு வருகைதரும் வயதான முதியோர்களும் உடல் நலம் குன்றியவர்களும் அதிகம் பயனடைவார்கள். அதுமட்டுமின்றி பல்நோக்கு மண்டபம் அமைந்தபின் சுற்று வட்டாரத்திலுள்ள அணைத்து மக்களும் பயனடைவார்கள்.

இத்திட்டம் கடந்த 27 ஆண்டுகளாக தலைவராக இருந்து பத்துமலைத் திருத்தளத்தை தற்போதைய நிலைக்கு உயர்த்திய தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா அவர்களின் கனவுத் திட்டமாகும்.

இந்தத் திட்டம் பற்றி மேலும் விவரித்த திரு. சிவகுமார், தற்போதைய மண்டபமும் கடை வரிசையும் அகற்றப்பட்டு, அவ்விடத்தில் மிகப் பிரமாண்டமாக இந்த கலாச்சார மையம் அமையப் போகிறது. இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த மையத்தில், கீழ் தலத்தில் கடை வரிசையும் மேல்மாடியில் கலாச்சார மையமும் அமைந்திருக்கும் என்றார்.

பத்துமலை வரலாற்றை கோசம் திரும்பி பார்த்தால், தற்போதைய மண்டபம் 1960 -களில் அப்பர் மேல்நிலைத் தமிழ் பள்ளியின் மாணவர் விடுதியாக செயல்பட்டுள்ளது. பிறகு துன் VT சம்பந்தன் அவர்களின் துணைவியார் உமா சம்பந்தன் நடத்தி வந்த சாரதா சங்கத்தின் பணிமனையாகவும் இருந்து வந்துள்ளது.

அதன் பிறகு பத்துமலை ஆரம்பத் தமிழ் பள்ளியின் வகுப்பறைகளாக உருமாற்றம் பெற்றது. பத்துமலைத் தமிழ் பள்ளி புதிய கட்டிட வளாகத்தைப் பெற்றவுடன், 700 பேர் அமரக்கூடிய மண்டபமாக மாற்றம் கண்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது.வார நாட்களில் 3000 சுற்றுப்பயணிகளும் வார இறுதி நாட்களில் ஏறக்குறைய 6000 சுற்றுப்பயணிகளும் பத்துமலைக்கு வருகைபுரிகின்றனர். இந்த மேம்பாட்டுத்திட்டம் நிச்சயமாக பத்துமலைக்கு ஒரு புதிய பரிணாமத்தைக்கொடுக்கும். பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் நல்ல வசதியான சூழலை அனுபவிப்பார்கள்.

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், செலாயாங் நகராண்மைக்கழகம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதில் மெத்தனம் காட்டுவது தமக்கு வருத்தமளிப்பதாக தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தமது அதிருப்தியை தெரிவித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதமே மேம்பாட்டு ஆணை ( Development Order) வழங்கியிருந்தாலும் செலாயாங் நகராண்மைக்கழகம் இத்திட்டத்தை முடக்கி வைத்திருப்பதின் காரணமும் நோக்கமும் தமக்குத் தெரியவில்லை என்று திரு. சிவக்குமார் மேலும் தெரிவித்தார்.

தேவஸ்தானம் இதுவரை 1.5 மில்லியன் வரை திட்டமிடல், வரைபடம், வடிவமைப்பாளர் மற்றும் இதர பல வேலைகளுக்காக செலவிட்டுள்ளது. கால தாமதம் இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் மொத்த செலவினத்தையும் கூட மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதையும் திரு. சிவக்குமார் வலியுறுத்தினார்.

இறுதியாக மீண்டும் ஒருமுறை விண்ணப்பம் செய்ய உள்ளோம், இந்தமுறையாவது செலாயாங் நகராண்மைக்கழகம் தேவையான ஒப்புதல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் திரு. சிவக்குமார் தெரிவித்தார்.

Exit mobile version