Site icon அநேகன்

பூச்சோங் தமிழ்ப்பள்ளிக்கு 40 ஆயிரம் மானியம் : எண்ணம் போல் வாழ்க்கை! – தொழிலதிபர் ஜீ.வி. நாயர்

பூச்சோங், ஆகஸ்ட் 9-

பொருளாதார பலம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்கு தடையாக இருக்கக்கூடாது அதற்காகவே தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து உறுதுணையாக இருப்பதாக தொழிலதிபரும் சமூக சேவையாளர் ஜீ.வி. நாயர் தெரிவித்தார்.

பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் கணினி அறை அமைப்பதற்கு அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பள்ளியாக விளங்கினாலும் கணினி அறை அமைப்பதற்கு அவர்களால் அரசாங்கத்தின் நீதியை எதிர்பார்க்க முடியவில்லை. இந்த விவகாரம் தொழிலதிபர் ஜீவி நாயர் அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

பள்ளிக்கு வருகை புரிந்து ஆசிரியர்களை பார்த்து பேசி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு அந்த பள்ளியில் கணினி அறை அமைப்பதற்கு 40 ஆயிரம் வெள்ளி வழங்குவதாக ஜீவி நாயர் உறுதி அளித்தார். அரசாங்கத்தின் முழு உதவிபெறும் பள்ளிக்கு உதவி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும் இங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இப்பள்ளியில் கணினி அறை அமைப்பதற்கு தாம் உதவி செய்வதாக ஜீவி நாயர் தெரிவித்தார்.

நாம் அடையாத ஒன்றை நமது மாணவர்கள் செய்யும் பொழுது அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது நமது கடமை. கல்வித் தாய் நம்மை அரவணைக்கவில்லை. ஆனால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு என ஜீவி நாயர் கூறிய போது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

எண்ணம் போல் வாழ்க்கை. நீங்கள் எதுவாக மாற நினைக்கிறீர்களோ அதுவாக நிச்சயம் மாறுவீர்கள். அந்தப் பயணத்தின் இடையில் எந்த தடங்கலும் இல்லாமல் நேர் நோக்கி செல்ல வேண்டியது தான் உங்களின் கடமை. இலக்கை முடிவு செய்த பிறகு நீங்கள் பயணம் செய்தால் நிச்சயம் வெற்றி என்ற ஒன்று உங்களை வந்தடையும்.

செல்கின்ற பாதையில் முட்கள் இருக்கலாம் ஆனால் நாம் சென்று சேரும் இடம் கோவிலாக இருக்க வேண்டும். தடைகளை கடந்து நேர் பாதையில் சென்றவர்கள் இன்று மக்கள் மத்தியில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேலை இருக்கின்றது. மாணவராகிய உங்களுக்கு கல்வி மட்டுமே ஒரே சிந்தனை. அதை மட்டும் நினைவில் நிலைநிறுத்தி அதை நோக்கி பயணம் செய்தால் உங்களின் சிறந்த எதிர்காலத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என ஜீவி நாயர் தெரிவித்தார்.

பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் சுதந்திர மாத தொடக்க விழாவும் நடந்தது. அதற்கு தொழிலதிபர் ஜீவி நாயர் தலைமையேற்றார். இந்நிலையில் இவ்வாண்டு அப்பள்ளியை பிரதிநிதித்து பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனை எடுத்து வழங்கிய ஜீவி நாயர்,  சாதித்த மாணவர்களை எப்பொழுதும் ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்களுக்கு பண முடிப்பை வழங்கினார்.

முன்னதாக தொழிலதிபரும் சமூக சேவையாளருமான ஜீ.வி. நாயருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பூச்சோங் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் பாக்கியம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் டத்தோ பரமசிவமும் கலந்து கொண்டார்.

Exit mobile version