கெரியான், ஆக 15-
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 200.9ஆவது கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆனந்தபவன் உணவக உரிமையாளர் ஹரிகிருஷ்ணனின் மனைவி புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிகாலை 3.00 மணியளவில் குடும்பத்தார் அனைவரும் தைப்பிங்கிலிருந்து பினாங்கை நோக்கி சென்றுக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கெரியான் மாவட்ட போலீஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தை மோதியதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காரை செலுத்திய ஹரிகிருஷ்ணனுக்கு (வயது 51) கை முறிந்து, முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. உடன் பயணித்த அவரது மகன்கள் வீராசாமி (வயது 21), மேகுலன் (வயது 17) ஆகியோர் முட்டி, கை கால்களில் ஏற்பட்ட காயங்களுடன் உயிர்தப்பினர். ஆனால், தலையில் பலத்த காயம் அடைந்ததால் புவனேஸ்வரி (வயது 47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புவனேஸ்வரியின் உடல் சவப்பரிசோதனைக்காக பாரிட் புந்தார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. ஹரிகிருஷ்ணன், வீராசாமி, மேகுலன் ஆகியோர் சிகிச்சைக்காக தைப்பிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

