Site icon அநேகன்

அமைச்சர் குலசேகரன் மற்றும் நால்வருக்கு எதிராக ஜாகிர் நாயக் போலீஸ் புகார்; 48 மணிநேரத்தில் குலசேகரன் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

கோலாலம்பூர், ஆக 16-

சர்ச்சைக்குரிய சமய போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க், மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், பினாங்கின் இரண்டாவது துணை முதல்வர் பி.ராமசாமி மற்றும் இதர மூவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்துள்ளார்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சன்தியாகோ, பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதிஸ் முனியாண்டி, முன்னாள் தூதர் ஆகியோரை தமது போலீஸ் புகாரில் அவர் பெயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய சமய போதகரும் மலேசியாவின் நிரந்தர குடியிருப்புவாசியுமான ஜாகிர் நாய்க் இன்று காலை ஷா ஆலாமில் போலீஸ் புகார் செய்திருக்கிறார்.

அந்த ஐவரும் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் பத்திரிகை செய்திகள் தம்மை அவதூறுபடுத்தியதாகவும் ஜாகிர் நாய்க் தமது புகாரில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரம் கிளாந்தானில் தாம் சொற்பொழிவாற்றியதை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் பத்திரிகை செய்திகள் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஜாகிர் நாய்க் தெரிவித்திருக்கிறார்.

தமது உரையின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலை தவறாக புரிந்துக் கொண்டு சம்பந்ததப்பட்ட அந்த தனிப்பட்ட நபர்கள் தமக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டிருப்பதாக அவர் சொன்னார்.

தங்களது சொந்த அரசியல் நலனுக்காக அவர்கள் இதனை சாதகமாக பயன்படுத்தியிருப்பதாகவும் ஜாகிர் நாய்க் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அந்த தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக குற்றவியல், நிந்தனை மற்றும் இதர சட்டங்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜாகிர் தமது புகாரில் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, இன்னும் 48 மணிநேரத்திற்குள் குலசேகரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜாகிர் கூறியிருக்கிறார்.

Exit mobile version