ஷா ஆலம், ஆக 17-
இந்து சமயத்தில் கட்டுகோப்பும் ஒழுங்கும் ஆலய விழாக்களில் குறிப்பாக திருவிழா காலங்களில் கடைப்பிடிக்க வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் கேட்டுக் கொண்டார்.
நமது இந்து சமயம் தொன்மையான மற்றும் நன்னெறி மிக்க கலாச்சாரத்தை கொண்டது. ஆனால், ஆலய திருவிழாக்களில் நடக்கும் வன்முறை கலாச்சாரம் இந்துக்களிடையே தலைக்குனிவை ஏற்படுத்தி வருவதாக அவர் வருத்தத்தோடு தெரிவித்தார்.
இன்று காலை ஷா ஆலாமில் நடைபெற்ற சிலாங்கூர் இந்து ஆலயங்கள் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசியபோது கணபதி ராவ் இதனை தெரிவித்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன் சிலாங்கூர் இந்து ஆலயங்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த ஆலயங்களின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டிருப்பது குறித்து தாம் மனநிறைவு அடைவதாக அவர் சொன்னார்.
ஆண்டுதோறும் சிலாங்கூர் அரசாங்கம் மாநிலத்திலுள்ள ஆலய நிர்வாக உறுப்பினர்களை ஒன்று திரட்டி ஆலயத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது. சிலாங்கூரில் 2500 ஆலயங்கள் இருந்தாலும் கிட்டத்தட்ட 300 ஆலயங்களின் நிலப்பிரச்னை தீர்வுக் காணப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
எனினும், இன்னும் பல ஆலயங்கள் முறையாக பதிவு செய்யப்படாமலும் உள்ளன. சிறு சிறு ஆலயங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் இன்னும் அதிக நன்மைகளை பெற முடியும். நமக்கு ஆலயங்களில் கோபுரங்களை பெரியதாக நிர்மாணிப்பதில் போட்டா போட்டி தேவையில்லை. ஆலயங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதன் நிர்வாகம் சிறந்த முறையில் செயல்பட்டு ஆலயத்தின் மூலம் சமூக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தக்கூடிய அவசியம் இருப்பதை ஆலய நிர்வாகத்தினர் உணர்ந்து செயல்பட வேண்டும்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்து ஆலயங்களுக்காக தற்போது 17 லட்சம் வெள்ளியை ஒதுக்கியிருக்கிறது. முறையாக செயல்படும் மற்றும் சிறந்த கட்டமைப்பைக் கொண்ட ஆலயங்களுக்கு மாநில அரசாங்கம் மாணியம் வழங்கி வருவதாக கணபதி ராவ் தெரிவித்தார்.
இந்து சமயம் மனிதநேயத்தை காலம் காலமாக வலியுறுத்தி வருகிறது. வறுமை, அவநம்பிக்கை போன்றவற்றை துடைத்தொழிப்பதற்கு சமய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். இன்று திருவிழாக்களில் மோர் பந்தலுக்காக நடத்தப்படும் கலவரத்தினால் தேர் ஊர்வலம் நிறுத்தப்பட்ட அவலத்தையும் நாம் கடுமையாக கருத வேண்டும். 2008ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரில் 150 ஆலயங்களுக்கு நிலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பல ஆலயங்கள் பொருளாதார பிரச்னையை எதிர்நோக்கியிருக்கின்றன. நமது ஆலயங்களின் செயல்பாடு மற்றும் அதன் நடவடிக்கைகள் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் சமயத்தை எந்தக் காலத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை. மொழி, சமயம் மற்றும் கலாச்சாரத்தை தற்காத்துக் கொள்வதற்காக போராடி வந்துள்ளனர். இன்று இப்படிபட்ட உணர்வு குறிப்பாக நமது சமயநெறிகளும் நடவடிக்கைகளும் கட்டொழுங்கு மிக்க ஒன்றாக உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதையும் கணபதி ராவ் வழியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

