காராக், ஆகஸ்ட் 19-
காராக் ஸ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தில் புதிய ரத வெள்ளோட்ட விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அண்மையில் ஸ்ரீ பாலசுப்பிரமணியம் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரத வெள்ளோட்டம் காராக் சாலையை வலம் வந்தது.
அந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியின் போது நமது பாரம்பரிய நடனங்களும் பக்திப் பாடல்களும் இடம்பெற்றன. இந்த ரதத்தை ஆலயத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவரும் ஆகிய அமரர் வீ. சின்னுவின் தம்பி வீ. முத்துசாமி குடும்பத்தார் (ஸ்ரீ எம்.எஸ் மேம்பாட்டு நிறுவனம்) நன்கொடையாக வழங்கினர்.
இந்த ரத வெள்ளோட்டம் மாலை 5 மணி தொடங்கி இரவு வரை தொடர்ந்தது. அதுமட்டுமின்றி ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும் இடம்பெற்றன. நெகிரி செம்பிலான் இல் இயங்கிவரும் ஏ.ஏ. கிளாசிக் ஹோம் எனும் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ்குமார் ஸ்தபதி பிரதீபன் ஆகியோர் இந்த புதிய ரகத்தை வடிவமைத்து உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரத வெள்ளோட்டத்தை முன்னிட்டு முதல் நாள் மாலை ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் தொடங்கின. மறுநாள் வெள்ளோட்ட தினத்தன்று பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து ஆலயத்தின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ வேலாயுத சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகளும் அதனைத் தொடர்ந்து ரத வெள்ளோட்டம் தொடங்கியது.
ஆலயத் தலைவர் சி.சிவலிங்கம் மற்றும் ஆலயத்தின் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் இந்த புதிய ரதத்தை ஆலயத்திற்கு வழங்கிய முத்துசாமி குடும்பத்தினருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆலயத்திற்கு ரத்தம் வழங்கிய மற்றும் ரதத்தை உருவாக்கிய அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

