கோலாலம்பூர், ஆக.28 –
2017 சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் 100 ஆவது தங்கப் பதக்கத்தை தேசிய ஜிம்ராமா வீராங்கனை ஏமி குவான் டிக் வெங் பெற்றிருக்கிறார். திங்கட்கிழமை காலை மலேசிய அனைத்துலக கண்காட்சி மற்றும் வாணிப மையத்தில் நடைபெற்ற ரிபென் போட்டியில் ஏமி குவான் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதனிடையே திங்கட்கிழமை காலை ஒதுக்கப்பட்ட நான்கு தங்கப் பதக்கங்களையும் தேசிய ஜிம்ராமா அணியினர் வென்றனர். முதல் தங்கப் பதக்கத்தை லூப் பிரிவில் கோய் சியே யான் வென்றார். அதனைத் தொடர்ந்து பந்து பிரிவில் இசா அம்சான் இரண்டாவது தங்கத்தை வென்றார்.
இந்தப் போட்டியில் மலேசியாவின் கோய் சியே யான் வெள்ளிப் பதக்கம் வென்ற வேளையில் இந்தோனேசியாவின் நபிலா வெண்கலப் பதக்கம் பெற்றார். பேட்டன் பிரிவில் கோய் சியே யான் மூன்றாவது தங்கம் வென்ற வேளையில் நான்காவது தங்கப் பதக்கத்தை ஏமி குவான் டிக் வெங் பெற்றார்.
