Site icon அநேகன்

2 வாரத்தில் உடைபடும் அபாயத்தில் கிள்ளான் பெர்க்கிலி கோனர் உணவகம்!

கிள்ளான் ஆக. 28-
இங்குள்ள பெர்க்கிலி கோனர் உணவகத்தை உடைப்பதற்காக இன்று காலை மணி 10.00 அளவில் கிள்ளான் நகராண்மைக்கழக அதிகாரிகளும், நில அலுவலக அதிகாரிகளும் சுமார் 100-க்கும் அதிகமான போலீசுடன் அங்கு வந்திருந்தனர்.

உணவகத்தை உடைத்தெறிவதற்கு கடப்பாறை உள்ளிட்ட பொருட்களுடன் கிள்ளான் நகராண்மைக்கழக அதிகாரிகள் அங்கு வந்திருந்தனர். ஆயினும், இந்தியருக்கு சொந்தமான உணவகம் உடைபடுவதிலிருந்து காப்பாற்றுவதற்கு கிள்ளான் சுற்று வட்டாரத்திலுள்ள பொது மக்கள் கட்சி பேதம் பாராமல் போராட்டத்தில் குதித்தனர்.

அவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த பலனாக எம்.பி.கே. அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதற்குமுன் பலமுறை அந்த உணவகத்தை உடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தது. இன்று இந்த உணவகத்தை உடைப்பதற்கான கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் உத்தரவு கடிதத்தோடு நில அலுவலக அதிகாரி துவான் அமாட் பித்ரி அந்த உணவகத்தினுள் நுழைந்த போது காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணிவண்ணன், போர்ட்கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, ஸ்ரீ அண்டலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் சிலாங்கூர் மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு தலைவர் கஜேந்திரன் முதலானோரும் அங்கும் திரண்டிருந்தனர்.

இந்த வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் கிள்ளான் நகராண்மைக் கழக ஊழியர்கள் கடையினுள் அத்து மீறி நுழைந்து மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். இதனால், அங்கு இருதரப்புக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த பதட்டமான சூழ்நிலையில் அங்கு போலீசும் களமிறங்கினர். சூழ்நிலை பதட்டமாக இருந்ததினால் போலீஸ் படையினர் அழைக்கப்பட்டனர். உணவகத்திற்கு ஆதரவாக சுமார் 500 பேருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு கூடி உணவகம் உடைப்படுவதிலிருந்து தடுத்து நிறுத்தினர். இது இந்தியரின் கடையாக இருந்தாலும் சீன இளைஞர்களும் அப்போராட்டத்தில் களமிறங்கியது அனைவரின் கவனத்தையும் இழுத்தது.

இதனால் கிள்ளான் நகராண்மை கழக அதிகாரிகளும் நில அதிகாரிகளும் அந்த உணவகத்தின் உரிமையாளர் திருமேனி முத்துசாமிக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இது குறித்து திருமேனி கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக இங்கு உணவகம் நடத்தி வருவதாகவும், அதற்கான நில வரியும், பிற வரிகளையும் செலுத்தி வந்ததாகவும், கடந்த சில ஆண்டுகளாக அதனை கிள்ளான் நகராண்மை கழகமும் நில அலுவலகமும் ரத்து செய்து விட்டதாகவும் கூறினார்.

இதன் தொடர்பில் பல முறை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை சந்தித்து பேச முயற்சித்தும் எதுவும் நடக்கவில்லை. இந்த இடத்தை மற்றவர்களுக்கு விற்பதற்கு பதிலாக அதே விலைக்கு நாங்கள் வாங்கிக் கொள்ளவும் தயாராக இருப்பதாக சிலாங்கூர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். அதை அவர்கள் காது கொடுத்து கேட்டதாகத் தெரியவில்லை வருத்தத்துடன் திருமேனி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Exit mobile version