கோலாலம்பூர், ஆக.28-
கூட்டரசு பிரதேச மஇகாவின் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் தர்மகுமாரன் மீது மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் போலீஸ் புகார் அளித்தார். அதோடு, அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
பெரித்தா டெய்லி இணையத்தள பதிவேட்டில் இடம்பெற்றிருந்த ஒரு செய்தியில் என்னை அவமானப்படுத்தும் வகையில் அவர் கருத்தினை பதிவேற்றம் செய்தது தொடர்பில் தர்மகுமாரன் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து டாங் வாங்கி போலீஸ் நிலையத்திலும் அவருக்கெதிராக தாம் புகார் அளித்திருப்பதாகவும் கேவியஸ் தெரிவித்தார். கேமரன்மலையில் நான் போட்டியிடபோவதை அறிந்து என் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தர்மகுமாரன் கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது கருத்து மனதளவில் என்னை பாதித்துள்ளது.
இதன் அடிப்படையில் அவர் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தில் புகார் செய்திருப்பதோடு மானநஷ்ட வழக்கையும் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். அவர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது அவரது கட்சியின் முக்கிய தலைவர்களும் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
சமூக வலைத்தளத்தை தவறாகப் பயன்படுத்துவதில் எதிர்க்கட்சிகள் கைத்தேர்ந்தவர்களாக இருக்கின்றனர் என்றால், தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் மஇகாவின் உறுப்பினர்களும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது வேதனையளிக்கின்றது. தேசிய முன்னணி உறுப்பினர்கள் தவறு செய்தாலும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய முன்னணி எக்காரணத்தைக் கொண்டும் பாரபட்சமாக செயல்படாது என்பதை இந்தப் புகாரின் வழி நிரூபித்துள்ளேன் என டான்ஸ்ரீ எம்.கேவியஸ் கூறினார்.
