ஜோர்ஜ்டவூன், ஆக.29 –
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தாம் மன்னிப்பு கோர வேண்டும் என்ற பல்வேறு தரப்பினர் முன் வைத்து வரும் கோரிக்கைக் குறித்து பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறார்.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பீ பூன் போவின் கைது செய்யப்பட்ட விவகாரம் சட்டவிரோதமானது என லிம் குவான் எங் கருத்து தெரிவித்ததை அடுத்து 48 மணி நேரத்துக்குள் அவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதன் தலைவர் டத்தோ சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்திருந்தார்.
” நேரம் வரும்போது எனது கருத்தை தெரிவிப்பேன் ” லிம் குவான் எங் செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
லிம் குவான் எங் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திங்கட்கிழமை அறிவித்திருந்தது.
48 மணி நேரம் கடந்தும் லிம் குவான் எங் மன்னிப்பு கேட்கத் தவறியதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆலோசித்து வருகிறது.
