கோலாலம்பூர், ஆக.29
2017 சீ விளையாட்டுப் போட்டிக்கான தேசிய திடல் தட குழுவில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ். கோமளத்துக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோ கரீம் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். சீ விளையாட்டுப் போட்டியில் கோமளத்தை நீக்கியது தேசிய திடல் தட குழுவின் முடிவு என்றும் அதனை தாம் மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் கோமளத்துடன் மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்துக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று அவர் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டி ,காமென்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ள வேளையில் தேசிய திடல் தட குழுவில் இடம்பெற கோமளம் முயற்சிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே சீ விளையாட்டுப் போட்டியில் தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை ஒரு கசப்பான அனுபவமாக தாம் மறந்து விடப் போவதாக கோமளம் தெரிவித்துள்ளார். கட்டொழுங்குப் பிரச்சினை என கூறி தம்மை சீ விளையாட்டுப் போட்டியில் இருந்து நீக்கியது வருத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
இருப்பினும் தமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பை ஒரு பாடமாக எடுத்து கொண்டு அடுத்த ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வுப் பெற முயற்சி செய்யப் போவதாக கோமளம் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர்க்கான 100 மீட்டர் அஞ்சல் போட்டியில் மலேசிய திடல் தட குழு எந்த ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை.
100 மீட்டர் அஞ்சலோட்டக் குழுவில் கோமளம் இடம்பெறாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது என அதில் இடம்பெற்றிருந்த சித்தி பாத்திமா தெரிவித்திருந்தார். கோமளம் இடம்பெற்றிருந்தால் நிச்சயம் வெண்கலப் பதக்கத்தையாவது வென்றிருக்க முடியும் என சித்தி பாத்திமா கூறினார்.
