கோலாலம்பூர், ஆக, 29-
உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் நாளை மலேசியாவிற்கு வருகைப் புரிகின்றார். மாலிக் ஸ்ரிம் காப்ரேஷன் பெருமையுடன் வெளியிடும், ஏ.ஆர். ரஹ்மான் கலைநிகழ்ச்சி உள்ளடங்கிய திரைப்பட தொகுப்பான ‘ஓன் ஹார்ட் நாளை இரவு 8 மணிக்கு கே.எல்.சி.சி. திரையரங்கில் வெளியிடப்படுகின்றது.
இதற்கு சிறப்பு பிரமுகராக இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொள்கிறார். முன்னணி பாடகர்கள் இந்த இசைத் தொகுப்பில் தங்களின் அனுபவங்களையும் ரஹ்மான் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்கள். இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது.
இசையில் புதுமையை வெளிகொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைப்படமாக. ஹாலிவுட்டில் மைக்கல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி தி இஸ் இட் என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
ஒன் ஹார்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைத்திரைப்படத்தில் அமெரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹமான் தலைமையிலான இசை சுற்றுபயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இடம்பெற்றன. திரையுலகில் தனது 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதின் நினைவாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
நாளை பிற்பகல் 2 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை ஏ.ஆர்.ரஹ்மான் வந்தடைவார். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் மலேசிய ரஹ்மானிக் ரசிகர் மன்றமும் இணைந்துள்ளது. இந்த அற்புத வாய்ப்பை வழங்கிய மாலிக் ஸ்ரிம் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக்கிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ரஹ்மானிக் மலேசியா தலைவர் ரசாலி யூசோப் கூறினார்.
இந்த ஓன் ஹார்ட் திரைப்படம் முழுக்க முழுக்க சமூகநல உதவிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இசை திரைப்படமாகும். இதற்கான ஒரு அறவாரியத்தையும் ஏ.ஆர். ரஹ்மான் தோற்றுவித்துள்ளார். இசைக் கலைஞர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக இந்த அறவாரியம் தொடக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கான முழு ஆதரவையும் ரஹ்மானிக் மலேசியா வழங்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த இசைத் திரைப்படத்தை ரஹ்மான் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் திரையரங்கில் காண வேண்டும். இதன் மூலம் பல இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுமென ரசாலி யூசோப் கேட்டுக் கொண்டார். திரைப்படத்திற்கான விளம்பரத்தை மிக பிரமாண்டமாக செய்யும் மாலிக் ஸ்ரிம் இந்த முறை ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பான முறையில் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு ரஹ்மானிக் மலேசியா முகநூல் பக்கத்தையும் மாலிக் ஸ்ரிம் இணையத்தளத்தையும் வலம் வரலாம்.
