ஈப்போ, ஏப். 2-
தேசிய நிலையில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து தேசியக் கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதைத் தொடர்ந்து, பல மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அந்த வகையில், பேரா மாநில ஆட்சியும் தேசியக் கூட்டணி வசம் வந்திருப்பதை அடுத்து நேற்று முன்தினம் பேரா மாநிலத்திற்கான புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அந்த ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஒருவர் கூட இந்தியரோ சீனரோ இடம்பெறவில்லை என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில் இந்தியர்களின் பிரதிநியாக யார் மாநில அரசாங்கத்தில் இடம்பெறுவார் என்ற கேள்வி வலுத்துவரும் நிலையில், மஇகாவின் மூத்த தலைவர் தான் ஶ்ரீ இராஜூ தனது ஆதரவைப் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்ரமணியத்திற்கு வழங்குவதாகக் கருத்துரைத்துள்ளார்.
தான் ஶ்ரீ இராஜூவின் அந்தக் கருத்து முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட கருத்தே தவிர, ஒருபோதும் அது கட்சியின் நிலைப்பாடு இல்லை என ஈப்போ பாராட் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் தியாகசீலன் கணேசன் கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்க மஇகாவின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் மட்டுமே உரிமை உள்ளது.
அப்படி இருக்க, தான் ஶ்ரீ ராஜுவின் பத்திரிக்கைச் செய்தியை மையப்படுத்தி இதுதான் ம.இ.காவின் நிலைப்பாடோ என்ற குழப்பம் புந்தோங் மக்களுக்கு மட்டுமின்றி அரசியல் ஆர்வளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனை மூத்த அரசியல்வாதி யூகிக்காமல்தான் கருத்துத் தெரிவித்தாரா என்பது சந்தேகத்திற்கும் வருத்தத்திற்கும் இடம் அளிப்பதாக தியாகசீலன் மேலும் கூறினார்.
பேரா மாநிலத்தை பொருத்தவரை, 2008ஆம் ஆண்டு தொடங்கி அரசாங்கத்தில் இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில், மஇகா தலைவர்கள் மாநில மந்திரி பெசாரின் ஆலோசகராகவும் சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு மாநில இந்தியச் சமூகத்திற்குச் சிறப்பான சேவையை வழங்கி வந்துள்ளனர்.
இந்த ஆட்சி மாற்றத்திலும் அதே சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், கடந்த காலங்களைப் போலவே சிறப்பு நியமனங்களின் மூலம் மாநில அரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதிகள் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். அதை விடுத்து, தனது சுய லாபத்திற்காகக் கட்சிதாவியிருக்கும் ஒருவரை மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிப்பதையோ, அதற்கு ஆதரவு வழங்குவதையோ ஈப்போ பாராட் இளைஞர் பகுதி வன்மையாகக் கண்டிப்பதாக அவர் மேலும் கூறினார்.

