Site icon அநேகன்

இளைஞர்கள் வர்த்தக திட்டமிடல் நடவடிக்கையில் ஈடுபடலாம்! டத்தோ காந்தாராவ் ஆலோசனை

கோலாலம்பூர், ஏப். 7-

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கும் சிறுதொழில் வர்த்தகர்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வர்த்தகத்தை திட்டமிடல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக சேவையாளரும் மலேசிய தெலுங்கு அறவாரியத் தலைவருமான டத்தோ அ.காந்தராவ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கோவிட் 19 நோய்த் தொற்று உலகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்கொள்ள மலேசிய அரசாங்கம் பெருஞ் சவாலுக்கு மத்தியில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மலேசியப் பிரதமர் தான்ஸ்ரீ முஹிடின் யாசின், சுகாதார இயக்குநர் நோர் ஹிஷாம், மருத்துவர்கள் தாதியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டத்தோ காந்தராவ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதேநேரத்தில் வெளிநாட்டில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள் குறிப்பாக இந்தியாவில் சிக்கிக் கொண்டு நாடு திரும்பியுள்ள அனைவரையும் வரவேற்பதோடு அவர்களை மீட்டு நாட்டிற்கு கொண்டு வந்துள்ள மலேசிய அரசாங்கம், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின், ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோருக்கும் டத்தோ காந்தராவ் நன்றி பாராட்டினார்.

இந்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையில் வீட்டில் இருக்கும் மக்கள் குறிப்பாக வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்தும் திட்டமிடல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

இந்த காலகட்டத்தில் வர்த்தகத் திட்டமிடல் நடவடிக்கை அவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் அலுவலகத்திற்கு சென்ற பிறகு வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

ஏனெனில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைக்குப் பிறகு வர்த்தகத்தில் 30 விழுக்காடு இழப்பு ஏற்படலாம் என்று டத்தோ காந்தராவ் தெரிவித்தார்.

வீட்டில் இருக்கும் சமயத்தில் மக்கள் இந்த கோவிட் 19 நோய்த் தொற்று விரைந்து விடுபட பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையை கவனிக்கலாம். இணையம் வழி கல்வி கற்க உதவலாம். குடும்பம், பிள்ளைகளுடன் நேரத்தை கழிக்க இதுவொரு சிறந்த காலம் என்றார் டத்தோ காந்தராவ்.

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையினால் வீட்டில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் மனவேதனை புரிகிறது. இதுவொரு இறுக்கமான கால கட்டம் என்பதை உணர்ந்து மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறு தங்கள் நேரத்தை பயனான வழியில் செலவிட வேண்டும் என்று டத்தோ காந்தராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version