கோலாலம்பூர், ஏப்.8 –
பெர்மாஜூ இண்டஸ்டிரியஸ் நிறுவனம் ஹாங்காங் நிறுவன தயாரிப்பிலான “பினாக்லோ சொலுஷன்” எனும் கை கழுவும் திரவ பொருளை தென்கிழக்காசிய சந்தைகளில் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது.
உலகையே தற்போது ஆட்டிப் படைத்து வரும் கோவிட் -19 தொற்று நோய்க்குத் தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளில் கை கழுவும் இந்தத் திரவ பொருளும் அடங்கும். இத்தொற்றுக்கு எதிராகச் செயல்படுவதில் இந்தத் திரவம் வெற்றி கண்டிருப்பதாக பெர்மாஜூ இண்டஸ்டிரியஸ் நிறுவனம் புர்சா மலேசியாவிடம் குறிப்பிட்டது.
பாதுகாப்பு நிறைந்த மற்றும் குறைந்த அளவிலான ரசாயன கலவையைக் கொண்ட “பினாக்லோ சொலுஷன்” கை கழுவும் திரவ பொருளை தென்கிழக்காசிய சந்தைகளில் விநியோகம் செய்யும் பொருட்டு தனது துணை நிறுவனமான டீம் ஜேப்ஸ் நிறுவனம் பெந்தாவெஃப் பயோடெக் லிமிடட் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதாக பெர்மாஜூ இண்டஸ்டிரியஸ் நிறுவனம் கூறியது. மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், வியட்னாம், தாய்லாந்து மற்றும் பிலிப்பன்ஸ் ஆகிய நாடுகளுக்கு “பினாக்லோ சொலுஷனை” விநியாகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
தொடக்கக் கட்ட தயாரிப்பு சுய முன்னெச்சரிக்கை சந்தைக்காகப் பயன்படுத்தப்படும் வேளையில் இதன் இரண்டாம் கட்ட தயாரிப்பு மருத்துவமனை, அலுவலகங்கள், உணவகங்கள் , பள்ளிகள் மற்றும் பொது போக்குவரத்து போன்றவற்றிற்கு விரிவாக்கம் காணப்படும் என்று அந்நிறுவனம் விவரித்தது.
உலகில் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் கோவிட் -19 தொற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ள வேளையில் இந்நோய் பரவாமல் தடுப்பதற்கான உடனடி தீர்வாக இப்பொருள் அமையும் “ என்று மற்றொரு அறிக்கையில் பெர்மாஜூ இண்டஸ்டிரியஸ் நிறுவனம் குறிப்பிட்டது.
“சொந்த மற்றும் நிறுவன தேவைகளுக்கு தொடர்ச்சியான பினாக்லோ கை கழுவும் திரவ பொருட்களை வெளியிட நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்” என்று பெந்தாவெஃப் தெரிவித்தது.

