Site icon அநேகன்

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படுமா?

புத்ராஜெயா ஏப்ரல் 10-

கோவிட் 19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து இருக்கும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என கூறப்படுகிறது.

மிகக் குறிப்பாக நோன்பு பெருநாள் வரை இந்த நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை முன்னெடுப்பதற்கும் அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிகின்றது.

கோவிட் 19 வைரஸ் தாக்கம் உலக நாடுகள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மலேசியாவில் அதனை கட்டுப்படுத்துவதற்காக நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை அரசாங்கம பிறப்பித்து மூன்று வாரங்களை கடந்து இருந்தாலும் இன்னமும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கமுடியவில்லை.

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை நீக்கினால் இந்த நோய்த்தொற்று பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசு அஞ்சுகிறது. குறிப்பாக ரமலான் மாத காலத்தில் சிறப்பு தொழுகைகளில் அதிகமானோர் கலந்து கொள்ளும் பட்சத்தில் இந்த நோய் தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இதனால் பல்வேறான சவால்களை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இன்னும் இரண்டு வாரங்களுக்கு நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை தொடர்வதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக தெரியவருகின்றது.

முன்னதாக இவ்வாண்டு யூபிஎஸ்ஆர், எஸ்பிஎம், எஸ் டி பி எம் ஆகிய தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்காக மட்டும் பள்ளி நடத்துவதற்கான முடிவு ஆலோசிக்கப்பட்டிப்பதாக கூறப்படுகின்றது.

இவர்களுக்கான முறையான பாதுகாப்பு அம்சங்கள் தயார் படுத்தப்பட்ட பிறகு இந்த மூன்று தேர்வுகளை எழுதும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுமென தெரிகின்றது. இதர மாணவர்கள் வீட்டிலிருந்து ஆசிரியர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இணையம் வழி கல்வி கற்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்த விருப்பதாக பேசப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் தான் ஸ்ரீ முகிதீன் யாசின் பொதுமக்களை சந்திக்கின்றார். கோவிட் 19 வைரஸ் காரணமாக நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படுமா? எம்மாதிரியான மாற்றங்களை அரசு முன்னெடுக்கின்றது என பல்வேறு கேள்விகளுக்கு அவர் விடை தர இருக்கின்றார்.

பிரதமரின் அறிவிப்பு வரும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டியது மிக அவசியம்.

Exit mobile version