புத்ராஜெயா, ஏப். 10-
கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் தான் ஸ்ரீ முகைதின் யாசின் கூறினார்.
இந்த நோய் தொற்றை மலேசியா மிகச் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தி வந்தாலும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டிப்பது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்தாலோ அல்லது முழுமையாக நாம் இதில் இருந்து விடுபட்டால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு வெளியிடும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே பள்ளிகளுக்கான விடுமுறையும் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வீட்டிலிருந்தே பிள்ளைகள் கல்வி கற்கும் நடைமுறையை கல்வி அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்ற பரிந்துரையை தாம் வைத்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
இந்த நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறும் தொழில் துறைகளின் உரிமம் பறிக்கப்படும் என்பதையும் பிரதமர் உறுதிப்படுத்தினார். ஒன்றிணைந்து இந்த கோவிட் 19 நோய் தொற்றிலிருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும் அதற்காக இணைந்து பணியாற்றுவோம் என பிரதமர் டான்ஶ்ரீ முகைதீன் கூறினார்.

