Site icon அநேகன்

சிறு, நடுத்தர தொழிற் துறையினரின் நலனைத் தொடர்ந்து பாதுகாப்பீர்! – டத்தோ ராமநாதன் வலியுறுத்து

கோலாலம்பூர், ஏப். 10-

       பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்காக அண்மையில் அறிவித்த 10 பில்லியன் வெள்ளி கூடுதல்  பரிவுமிக்க திட்டம் இச்சாராரின் சுமையை ஓரளவு குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

         இந்த மீட்பு திட்டம் பாராட்டுக்குரியது என்றும்  50 விழுக்காட்டு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தங்களின் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்க இது  உதவியாக அமைந்தது என்றும்  கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையின் தலைவர் டத்தோ ஆர். ராமநாதன் தெரிவித்தார்.

     அரசாங்கம் அறிவித்த இத்திட்டத்தில் பயனடைந்த 80 விழுக்காடு சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் வசமே நாட்டின் வேலை வாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு உள்ளன. இத்தரப்பினரே நாட்டின் 40 விழுக்காடு பொருளாதாரத்தை உறுதிப்படுத்துகின்றனர். இந்நிலையில் நாட்டிலுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நலனை இத்திட்டம் பாதுகாக்கிறது என்று  அறிக்கை ஒன்றின் வழி ராமநாதன்  குறிப்பிட்டார்.

    இந்தச் சம்பள உதவி திட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையான கூடுதல்பட்சம் 4,000 வெள்ளி சம்பளம் மற்றும் 50 விழுக்காடு சம்பள குறைப்பு நிபந்தனை அகற்றப்பட்டால் இத்திட்டம் மேலும் பயனளிக்கும். மாறாக, சம்பள உதவி தொகை அனைத்து ஊழியர்களுக்கும் சரிசமமாக வழங்கப்பட வேண்டும் என்றார்.

      500 மில்லியன் வெள்ளி மைக்ரோ கிரெடிட்  கடனுதவிக்கான 2 விழுக்காடு வட்டி விலக்களிப்பு மற்றும் தெக்குன் வழி சிறு வணிகர்களுக்கு ஒரு நிறுவனத்திற்கு கூடுதல்பட்சம் 10,000 வெள்ளி வட்டியில்லா கடன் போன்றவை வரவேற்கத்தக்க நடவடிக்கைகளாகும் என்றார்.

        எனினும், கோவிட் – 19 தொற்று அபாயம் முடிவுற்றவுடன் வர்த்தக நடவடிக்கைகள் சுமூகமாக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தும்  வகையில் தகுதி பெற்ற அனைத்து சிறு மற்றும் நடுத்தர  வர்த்தகர்களுக்கு 2% வட்டி விகித்தில் 2019 ஜனவரி தொடங்கி 2020 பிப்ரவரி வரையிலான ஓராண்டின் மொத்த வருமானத்தில் 10%  உதவி நிதி அல்லது ஓவர் டிராப்ட் வசதியாக நிறுவனம் ஒன்றுக்கு கூடிய பட்சம் 100,000 வெள்ளி  வழங்க வேண்டும். இந்த உதவி நிதியை நடப்பு கணக்கைக் கொண்டிருக்கும் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களின் வங்கிகள் வழங்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நடப்பு கணக்கு இருந்தால், அவற்றில் ஏதேனும் ஒரு வங்கி இந்த நிதி அல்லது வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.  இந்த மீட்பு நிதியுதவி திட்டத்தில் CCRIS மற்றும் CTOS ஆகிய நிபந்தனைகள்  அகற்றப்பட வேண்டும் என்றும் ராமநாதன் கோரிக்கை விடுத்தார்.

      அதே வேளையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கால கட்டத்தில் சிறு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்போர், பங்காளித்துவ முறையிலான நிறுவனங்கள் உள்ளிட்ட அதிகமான நிறுவனங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. ஆகையால், அரசாங்கம் இவர்களின்  வர்த்தக புதுப்பிப்பு கட்டணம், எஸ்எஸ்எம் புதுப்பிப்பு கட்டணம் மற்றும் 2020 ஆண்டுக்கான வருமான வரி ஆகியவற்றிற்கு விலக்களிப்பு வழங்க வேண்டும் என்றும்  அவர் கேட்டுக் கொண்டார்.

     பரிவுமிக்க கூடுதல் உதவி திட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரின் மற்றொரு விவகாரமும் விடுபட்டுவிட்டது. முதலாளி மற்றும் தொழிலாளருக்கான இபிஎஃப் சந்தா தொகை விவகாரமே அது.கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முதலாவது ஊக்குவிப்பு திட்டத்தில் ஊழியர்களின் பங்கு 7 விழுக்காடாகக் குறிப்பிடப்பட்டிருந்த வேளையில் முதலாளிமார்களின் பங்கு அதே 12 விழுக்காடாக நிலைநிறுத்தப்பட்டது. இவ்விரு சாராரும்  பயனடையும் வகையில்   2020 ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் வரை 6 மாதங்களுக்கு இபிஎஃப் சந்தா தொகை விலக்களிப்பு வழங்குமாறு  அரசாங்கத்தை அவர்   கேட்டுக் கொண்டார்.

    அடுத்து, அந்நிய நாட்டு தொழிலாளர்களுக்கான 25 விழுக்காடு லெவி கட்டண குறைப்பால் அதிக நன்மைகள் இல்லை. கோவிட் -19 தொற்று நோய் அடுத்த ஓராண்டுக்கு வர்த்தகத்தைப் பாதிக்கும் என்பது நிச்சயம். இதன் பொருட்டு அரசாங்கம் 2020 டிசம்பர் 31 ஆம் தேதி காலாவதியாகும் அந்நிய நாட்டு தொழிலாளர்களுக்கான பெர்மிட்டுகளைப் புதுப்பிப்பதற்கு முழு விலக்களிப்பு வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்நடவடிக்கையானது 200க்கும் அதிகமான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் பெரிய நிறுவனங்களுக்குப் பயனைத் தரும். காரணம் அரசாங்கத்தின் இந்தக் கூடுதல்  ஊக்குவிப்பு திட்டம் பெரிய நிறுவனங்களுக்கு எவ்வகையான நன்மையையும் கொண்டு வரவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

    அரசாங்கம்  ஆகக் கடைசியாக அறிவித்திருக்கும் இந்தக் கூடுதல் 10 பில்லியன் வெள்ளி ஊக்குவிப்பு திட்டம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முதுகெலும்பாகத் திகழும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு ஒரு பகுதி நன்மையையே அளித்துள்ளது.

       கோவிட் – 19 தொற்று முடிவடைந்த பின்னர் இத்துறையினர்  சுமூகமான வர்த்தகத்தில் ஈடுபடுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் இவர்களின் நலனைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்று தாங்கள்  எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

        இக்கட்டான கால கட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரைப் பாதுகாப்பது இனி வருங் காலங்களில் அரசாங்கத்திற்கு நல்ல வருவாயைப் பெற்றுத் தரும் என்பது நிச்சயம் என்றார் ராமநாதன்.

Exit mobile version