Site icon அநேகன்

தேசிய கூட்டணியின் மீது நம்பிக்கையை இழக்கின்றதா மஇகா?

கோலாலம்பூர் மே 6-

தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் இந்திய சமுதாயத்தின் நிலை என்ன என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது என மலேசிய கெசட் செய்தி வெளியிட்டுள்ளது.

மிகக் குறிப்பாக மலேசிய இந்தியர்களின் மிகப் பெரிய கட்சியாக விளங்கும் மலேசிய இந்திய காங்கிரஸிக்கு (மஇகா) இந்த புதிய அரசாங்கத்தின் கீழ் எந்தக் கோட்பாடும் திசையும் இல்லை என அது சுட்டிக்காட்டியுள்ளது.

கோவிட் 19 கிருமி தொற்றை எதிர்த்துப் போராடுவதில் நாம் அனைவரும் மும்முரமாக இருப்பதால் நாட்டைப் பாதித்த அரசியல் கொந்தளிப்பு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவில்லை. இருப்பினும் ஒடுக்குமுறை தெளிவாகத் தெரிவதாக அந்த இணைய நாளேடு கூறியுள்ளது.

தேசிய கூட்டணி அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருக்கும் மஇகாவிற்கு ஒரே ஒரு முழு அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட தாகத் தெரிகின்றது. முன்னதாக நம்பிக்கை கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது மலேசிய இந்தியர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அமைச்சரவையில் 4 முழு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மலேசிய இந்திய காங்கிரசின் தகவல் பிரிவு தலைவர் வி குணாளன், இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்தை எப்படி திட்டமிட முடியும் என்று உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

குணாளனின் கூற்றுப்படி சுதந்திரத்திற்கு முன்பே இந்திய சமுதாயத்திற்காக நீண்ட காலமாகப் போராடி வரும் மஇகா தனது குரலையும் இன்றைய அரசாங்கத்தில் உரிமையையும் இழந்து விட்டதாகவே தோன்றுகிறது எனக் கூறியதாக. மலேசிய கேசட் கூறியிருக்கின்றது.

அதோடு இந்த நாட்டில் ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தின் கதி என்ன? அவர்களுக்கான தூரநோக்குச் செயல்திட்டம் என்ன? அவர்களின் நலன் உரிமைகள் பின்னர் உறுதி செய்யப்படுமா என்பது எனக்குத் தெரியவில்லை அதோடு உங்களுடைய கேள்விக்கும் பதிலளிக்கத் தற்போது வாய்ப்பில்லை என குணாளன் கூறியுள்ளார்.

கட்சியில் என்ன நடக்கிறது என்பதற்கு நான் உங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறமுடியும். இதுவரை எங்களுக்கு ஒரேரோர் அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. துணை அமைச்சர்கள், செனட்டர்கள் இதர பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.

தேசியக் கூட்டமைப்பில் உள்ள இதர கட்சிகளுக்கு அதிகமான பதவிகள் வழங்கப்படும் நிலையில் நாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவே பார்க்கிறோம. இதுகுறித்து மக்களும் கேள்வி கேட்கிறார்கள் ஆனால் எங்களிடத்தில் பதில் இல்லை எனக் குணாளன் கூறியிருக்கின்றார்.

Exit mobile version