ஈப்போ, மே 19 –
அண்மையில் இணையத்தில் சமையல் காணொலிகள் வழ் புகழ் பெற்ற சுகு பவித்ரா இணையினர் இன்று யூடியூப் நிறுவனத்திடமிருந்து தங்களின் ஊதியத்தைப் பெற்றனர். கடந்த சனவரி முதல் தொடங்கிய தங்களின் யூடியூப் காணொலிகள் வெளியிடுவதை இன்றுடன் நிறைவு செய்தனர்.
சுங்கை சிப்பூட் நகரிலிருந்து ஈப்போவில் உள்ள பேரா மாநில அஞ்சலகத்திற்கு வந்த 28 வயது பவித்ரா தனது ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார். சனவரி மாதம் முதல் இன்று வரையிலான தங்களின் காணொலிக்குக் கிடைத்த வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு இன்று அந்த ஊதியத்தைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். கிடைக்கப்பெற்ற இந்த ஊதியத்தைக் கொண்டு தனது குடும்பத்திற்காகச் செலவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
புந்தோங் வட்டாரத்தைச் சேர்ந்த பவித்ரா இரண்டு குழந்தைகளுக்குத் தாயார ஆவார். யூடியூப் வாயிலாகப் பெற்ற ஊதியத்தைக் கொண்டு தனது குடும்ப உறுப்பினர்களுக்குப் புதிய ஆடைகளை வாங்க எண்ணம் கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் வசதி படைத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளைப் போல் பெருந்தொகையை நாங்கள் ஊதியமாகப் பெற்றிட வில்லை. சிறு தொகையாக இருந்தாலும் நாங்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளோம். இதற்காக நாங்கள் மிகுந்த ஆர்வமாகக் காத்திருந்தோம்.” என அவர் தனது மகிழ்ச்சியைப் புலப்படுத்திக் கொண்டார்.
“இந்த ஊதியத்தைக் கொண்டு நான் புதிய ஆடைகளையும் வழிபாட்டுப் பொருட்களை வாங்கப் பயன்படுத்துவதோடு எனக்கு சிகை சிகிச்சையையும் செய்து கொள்வேன்” என அவர் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியைப் போல் தங்களுக்குப் பல சமூக வலைத்தளப் பக்கங்கள் இல்லை என்பதோடு யூடியூப்பில் மட்டுமே கணக்கு உள்ளதென பவித்ராவின் கணவர் 29 வயது சுகு தெரிவித்தார்.
முறைகேடு ஏதும் ஏற்படுவதற்கு முன்னர் சக இணையவாசிகள் இவ்விவகாரம் குறித்து புகார் அளிக்க உதவுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து மேலும் பவித்ரா தெரிவிக்கையில், கடந்த 8 மே 2020ஆம் நாள் பெர்னாமாவில் தங்கள் சமையல் காணொலிகள் குறித்த செய்தி வெளிவந்த பிறகு, 160,000 ஆக இருந்த ஆதரவாளர் எண்ணிக்கை இன்று மாலை 4.00 மணி வரை 550,000 ஐத் தாண்டியுள்ளதாகத் தெரிவித்தார். எனவே, பெர்னாமா செய்தி நிறுவனத்துக்கு அவர் தனது நன்றியைப் புலப்படுத்திக் கொண்டார்.
பெர்னாமாவின் அந்தச் செய்திக்குப் பிறகு பல நிறுவனங்களாலும் தனி நபர்களாலும் அவர்கள் தொடர்புகொள்ளப்பட்டதாகவும் சமையல் பொருட்களையும் மின்சாரத் தளவாடங்களையும் நன்கொடையாக வழங்குவதாகவும் தெரிவித்த்தாக பவித்ரா கூறினார். இருப்பினும், தற்சமயம் தங்களிடம் உள்ள பொருட்கள் யாவும் தேவைக்கு ஏற்ப இருப்பதாக அவர் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் தான் ஶ்ரீ முகிதீன் யாசின் அவர்களிடமிருந்து வாழ்த்தும் பரிசுப் பொருட்களும் பெற்றத் தருணம் பெருமை நிறைந்த்தாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா செய்தி நிறுவனம் வெளியிட்ட தங்களின் பேட்டிக்குப் பிறகு பலர் தங்களைத் தொடர்பு கொண்டு பேட்டி வழங்கும்படியும் கோட்டுக் கொண்டனர். இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த வானொலியும் ஒன்று என அவர் கூறினார். தங்களின் எளிமையான இயல்பு வாழ்க்கை தற்சமயம் மிகுந்த பரபரப்பாகியுள்ளதால் பேட்டி வழங்கவே தனி கால அட்டவணை போட்டு அதற்கென தனி புத்தகமே ஏற்படுத்த வேண்டிய மாற்றுச் சூழலுக்கு வந்து விட்டதாக பவித்ரா தெரிவித்தார்.
தங்களின் சமையல் காணொலிகள் யாவும் அவர்களிடமுள்ள ஒரே கைப்பேசியைக் கொண்டு தான் பதிவு செய்ய வேண்டி உள்ளது. சமையல் காணொலி பதிவு செய்யும் நேரத்தில் அழைப்பு ஏதும் வந்தால் அது சமையல் காணொலிக்குச் சிக்கலாகிவிடும். அதனால்தான், கடந்த சில நாட்களாக அடிக்கடி சமையல் காணொலியைப் பதிவிட முடியவில்லை என பவித்ரா குறிப்பிட்டார்.

