Site icon அநேகன்

சிறுநீரக தூய்மிப்புக்கும் மருத்துவச் செலவுக்கும் பினாங்கு இந்து இயக்கம் உதவி!

பினாங்கு ஜூன் 11-

ஏழை எளியோருக்கு உதவுவதிலும், சமூகப் பணிகளை சளைக்காமல் மேற்கொள்வதிலும், அயராது செயல்பட்டு வரும் பினாங்கு இந்து இயக்கம், தனது தொடர்ச் சேவையின் வாயிலாக, ஓர் இளம் இந்தியப் பெண்ணின் சிறுநீரகத் தூய்மிப்புக்கும் மருத்துவச் செலவுக்கும் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சிறுநீரகத் தூய்மிப்புக்கு உள்ளாகியிருக்கும் குமாரி ஆர்.சிவசங்கரிக்கு (வயது 29) உதவுமாறு, அவரின் பெற்றோர்கள் பினாங்கு இந்து இயக்கத்தை கேட்டுக் கொண்டதன் பேரில், அவ்வண்ணமே அவரது தேவைக்கு உதவி வழங்கப்பட்டது.

குமாரி சிவசங்கரி தனது 19 வது வயதிலேயே சிறுநீரக நச்சுத் தன்மையை எதிர் கொண்டிருந்த நிலையில், நாளடைவில் அதன் பாதிப்புக்கு ஆளாகி விட்டதால், அவரது சிறுநீரகத் தூய்மிப்பின் கட்டாயத்திற்கு, தந்தையே பொறுப்பேற்று, அதற்கான செலவினங்களை தாமே கவனித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் இவருக்குக்கான சிறுநீரகத் தூய்மிப்பு, வாரம் மும்முறை என்ற கட்டாய எல்லையை எட்டியிருப்பதால், செலவு மிகுதியாகி விட்ட நிலையில், அவரதுப் பெற்றோர்கள் செய்வதறியாது பரிதவித்து நிற்பது பரிதாபகரமாக உருவெடுத்திருக்கிறது.

சிவசங்கரியின் சிறுநீரகத் தூய்மிப்புக்கும், ஊசி மருந்தேற்றத்திற்கும் வருடாந்திரச் செலவினமாக, ரி.ம 5,856 தேவைப்படுவது மிகப் பெரியதொரு சுமையாக அவரது பெற்றோரை வாட்டி வருகிறது. சிவசங்கரி, டின்களில் அடங்கிய மென்பானமும், உலர்த்தப்பட்ட பழத்துண்டுகளையும், அடிக்கடி உட்கொள்ளும் வழக்கத்தைக்கொண்டிருந்ததால், அவரது சிறுநீரகங்கள் பழுதடைவதற்கு காரணமாகிவிட்டதாக, அவருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர் தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிவசங்கரியின் சிறுநீரகத் தூய்மிப்புக்கு பினாங்கு இந்து இயக்கம் பரிவுடன் ரி.ம 3,000 வழங்கி ஆதரவளித்திருக்கும் நிலையில், அண்மையில் பெருந்தகை திரு.எஸ்.சி.வோங் வாயிலாக, அதற்கான காசோலையை பினாங்கு இந்து இயக்கத்தின் பொருளாளர் திரு.ஏ.நூக்கராஜூ சிவசங்கரியிடமே நேரிடையாக வழங்கினார்.

கெடா மாநிலத்தின் சுங்கைப் பட்டாணி நகரின், பண்டார் முத்தியாரா பகுதியைச் சேர்ந்த குமாரி ஆர்.சிவசங்கரிக்கு உதவ விரும்பும் அன்பர்கள், அவருடன் தொடர்பு கொண்டு உதவி வழங்கலாம் என்று, பினாங்கு இந்து இயக்கத் தலைவர் பி.முருகையா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது அலைபேசி எண்:- 010-2928569 என்பதாகும்.

Exit mobile version