Site icon அநேகன்

மீன் வளர்ப்புத் துறையில் 2 ஆயிரம் இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சி! -ஏ.கே. ராமலிங்கம்

கோலாலம்பூர் நவ. 9-

மீன்வளத் துறையில் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் 2000 பேருக்குப் பயிற்சி வழங்க மீன்வள மேம்பாட்டுத் துறை முடிவு செய்திருப்பதாக அதன் வாரிய உறுப்பினர் ஏகே ராமலிங்கம் தெரிவித்தார்.

மீன் வளர்ப்புத் துறையில், குறிப்பாக மீன் பிடிக்கும் தொழிலில் நாடு தழுவிய நிலையில் 400 இந்தியர்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள். இந்த எண்ணிக்கையைக் கணிசமான அளவு உயர்த்துவதற்கும் இளைஞர்களை இத்துறையில் ஈடுபடுவதற்கும் இந்த செயல் திட்டம் பெரிதும் உதவி புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மீன்வளத் துறையில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தாம் அடையாளம் கண்டதன் முயற்சியாக இந்த செயல்திட்டம் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

மலேசியாவைப் பொறுத்தவரை மீன்வளத் துறையில் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள மிகப்பெரிய வாய்ப்பு இருக்கின்றது. அதனை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென ராமலிங்கம் அறிவுறுத்தினார்.

தற்போது கடலோர பகுதிகளில் மீன் வளம் அதிகமாக இல்லாத நிலையில் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் தொழில் பல்வேறான சவால்கள் இருக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆழ் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க மிகப்பெரிய பொருளாதார வளம் தேவைப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

இச்சமயத்தில் வீட்டிலிருந்து மீன் வளர்க்கும் திட்டத்தைத் தாம் முன்னெடுத்து இருப்பதாகவும் இதற்கு மலேசிய இந்தியக் காங்கிரசின் (மஇகா) தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன், மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் ஆகியோர் தமக்கு ஆலோசனை கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்றுமதிச் சந்தைகளில் அதிகம் பிரசித்திபெற்ற மீன்களை வளர்க்கும் பயிற்சியை ஆர்வமுள்ள 2000 இந்திய இளைஞர்களுக்கு வழங்குவதோடு மீன் வளர்ப்புக்குத் தேவையான அடிப்படை செலவையும் அரசாங்கத்திலிருந்து பெற்றுத் தருவதற்கான முயற்சியில் மஇகா களமிறங்கி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி கட்டம் கட்டமாக நாடு தழுவிய நிலையில் உள்ள இந்திய இளைஞர்களுக்கு இதற்கான பயிற்சி வழங்கப்படும். மஇகா உட்பட மலேசிய இளம் தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் மலேசிய மீன்வள மேம்பாட்டுத் துறை ஒருங்கிணைப்பில் இந்த பயிற்சி வழங்கப்படும். ஆர்வமுள்ள இளைஞர்கள் தம்மை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என இயக்கிய ராமலிங்கம் கூறினார்.

தொடர்புக்கு 019-2421666

Exit mobile version