செலாயாங், நவ. 17-
திருமணத்தை நடத்துவதற்கும் அதில் 250 விருந்தினர்கள் கலந்து கொள்ளவும் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என மலேசியத் திருமண கழக தொழில் முனைவோர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இத்துறை சார்ந்த வல்லுநர்கள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 70 முதல் 80 விழுக்காடு நஷ்டம் அடைந்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது திருமண விழாக்களை நடத்தக் கூடாது என அரசு அறிவித்திருப்பது பல்வேறான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக அச்சங்கத்தின் தலைமைச் செயலாளர் அரபாத் அலி அருள் அலாவுதீன் தெரிவித்தார்.
திருமண சார்ந்த துறைகளில் ஈடுபடுபவர்கள் தரக் கட்டுப்பாட்டு உத்தரவு (SOP) முழுமையாகக் கடைப்பிடிக்கிறார்கள். அதனால் இதனைச் செயல்படுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அதோடு 20 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தங்கள் துறைக்குச் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
2021 ஜூன் மாதம் வரை வங்கிகளுக்கான கடனை திருப்பி செலுத்தாமல் இருக்கும் சலுகை நீட்டிக்கப்பட வேண்டும்
பரிவுமிக்க மக்கள் உதவித் திட்டத்தின் கீழ் இத்துறையில் பாதிக்கப்பட்ட சிறு வர்த்தகர்களுக்கு மலேசிய ரிங்கிட் 5,000 நிதி உதவியாக வழங்கப்பட வேண்டும்.
சிறு நடுத்தர வங்கி (SME), தெக்குன் ஆகியவற்றில் வர்த்தகர்கள் உடனடியாக கடனுதவி பெறுவதற்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும்
திருமண மண்டபங்களுக்கு வாடகை செலுத்தும் உரிமையாளர்களுக்கு 30% தள்ளுபடி வழங்கப்பட வேண்டும்.இதை 6 மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும்.
covid-19 தாக்கத்தைக் கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா வரியை அரசு ரத்து செய்ய வேண்டும்.
மின்சார கட்டணம், இணையப் பயன்பாடும் அரசு தள்ளுபடி வழங்க வேண்டும்.
என்ற 6 கோரிக்கைகளை அரபாத் அலி அருள் அலவுதீன்முன் வைத்தார்.

