செலாயாங், நவ. 26-
கடந்த தீபாவளிக்கு நாகரத்தினம் சமூக நலன் அமைப்பு சுமார் 120 தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் குடும்பங்களுக்கு இரண்டு மாத வீட்டுக்குத் தேவையான பொருள் உதவி மற்றும் புத்தாடைகளை வழங்கினர்.
50 மூதாதையர்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 100 ரிங்கிட் பணம் உதவி வழங்கப்பட்டது. தனித்து வாழும் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு வழங்கிய தீபாவளி அன்பளிப்பும் இதில் அடங்கும் .
கோலாலம்பூர் , சிலாங்கூர் மட்டும் இன்றி பேரா தாப்பாவில் வசிக்கும் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் உதவி செய்ய முன் வந்ததாக நாகரெத்னம் சமூக நல அமைப்பின் தலைவி விமலா நாகரத்தினம் கூறினார் .
மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் மேல் கல்வியைத் தொடரும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சமூக நல அமைப்பை நடத்தி வருகிறார். கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இவர் தனி நபராகப் பண உதவியும் பொருள் உதவியும் செய்துள்ளார்.
இந்த சேவையைத் தாம் முன்னெடுப்பதற்குப் பெற்றோர்கள் , தமிழ்க் கல்வி, இறை மற்றும் குரு நம்பிக்கையுடன் ஆசிரியர்களும் முதன்மைக் காரணம் என விமலா குறிப்பிட்டார். ஒரு பெண்ணாக சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டுத் தனித்து வாழும் தாய்மார்கள்,மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்குத் தக்க நேரத்தில் உதவி செய்து மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதே இவரின் உயரிய எண்ணம்.
இந்த தருணத்தில் நன்கொடையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் தாம் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளதாக விமலா கூறினார்.

