கோம்பாக், நவம்பர் 30:-
செலாயாங் 36 கும்பலின் தலைவன் எனக் கருதப்படும் மாலிக் என்பவனைக் கைது செய்ததில் அக்கும்பலை வீழ்த்தியதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இக்கும்பல் கோம்பாக் வட்டரத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகச் சொல்லப்படுவதோடு கொலை உட்பட பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வந்த்தாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட பல அதிரடி சோதனை நடவடிக்கைகளில் சிக்கிய அக்கும்பலைச் சேர்ந்த 16 பேர் கைதாகினர். அவர்களில் மாலிக்கின் தம்பிகளும் அடங்குவர்.
கடந்த 31-10-2020 ஆம் நாள் டாமான்சாராவில் உள்ள ஒரு வீட்டில் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் மாலிக்கைக் கைது செய்தனர்.
அந்தச் சோதனையில் கடந்த ஜூலை மாதம் பத்துமலைப் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் உட்பட பல குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
ஆராய்ந்து பார்த்ததில் காவல் துறை தேடிக் கொண்டிருக்கும் 7 குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகள் உட்பட மொத்தம் 10 குற்றப் பதிவுகள் மாலிக்கிற்குத் தொடர்புடையதாகும்.
குற்றவியல் பிரிவு 302, 326, 506, 435 ஆகியப் பிரிவுகளீன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக ஓம்பாக் வட்டாரக் காவல்துறை தலைவர் துணை ஆணையர் அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.
மற்றொரு நிலவரப்படி, கைது செய்யப்பட்ட அக்கும்பலைச் சேர்ந்த 16 பேரும் குற்றவியல் தடுப்புச் சட்ட்த்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் எழுவர் ஏற்கெனவே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாவர்.
மேலும், காவல்துறை அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இன்னும் ஐவரைத் தீவிரமாகத் தேடி வருகிறது. டிஎஸ். முகிலன் (29), வி. கனகேஷ்வரன் (27), எம் ஜெயந்திரன் (25), ஜி நவிந்திரன் கணேசன் (25), ஆர் பிரேம் கணேஷ் (27) ஆகியோர் அதே கோம்பாக் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டது.
தேடப்படும் குற்றவாளிகள் தொடர்பானத் தகவல்களை வழங்க காவல்துறை பொது மக்களை அழைக்கிறது. தகவல் அறிந்தவர்கள் கோம்பாக் மாவட்டக் காவல்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் முகம்மாட் ஃபைரூஸ் பஹாரோமை 013-2885449 அல்லது 03-61262222 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவலை வழங்கலாம்.

