கோலாலம்பூர், திசம்பர் 1:-
தேசியக் காவல் துறைத் தலைவர் தான் ஶ்ரீ அப்துல் ஹமீட் பாடோரை சுட்டுக் கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த செபஸ்தியன் எனும் ஆடவரை காவல்துறை தேடி வருகிறது.
இதன் தொடர்பில் குற்றவாளி என நம்பப்படும் ஆடவரைத் தேடும் பொருட்டு விசாரணை அறிக்கையைத் தொடங்கியிருப்பதாக புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைப் பிரிவின் இயக்குநர் டத்தோ ஹுஸீர் முகம்மாட் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குற்றவியல் சட்டம் 507 பிரிவின் படியும் தொலைத்தொடர்பு , பல்லூடகச் சட்டம் 233இன் படியும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தேடப்பட்டு வரும் ஆடவர் மனநோயாளி என்று தெரிவிக்கப்படுகிறது. அதையும் நாங்கள் விசாரணைக்குட்படுத்தி தெளிவு காணுவோம். சில மாதங்களுக்கு முன்னர் மாமன்னரை இழிவு படுத்திய விவகாரத்திலும் அந்த ஆடவர் சம்பந்தப்பட்டவர் எனவும் தெரிய வருகிறது.
நேற்று செய்தி ஊடகம் ஒன்றில் தன்னை தமிழீழ விடுதலைப் புலிகள் 2.0 இன் தலைமைத் தளபதி எனக் குறிப்பிட்ட ஆடவர் புக்கிட் அமான் காவல் துறை அலுவலகத்தையும் தற்காப்பு அமைச்சகத்தையும் தாக்கவிருப்பதாகச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இத்தாக்குதலுக்குப் பின்னர் ஶ்ரீ லங்காவைத் தக்கப்போவதாகவும் அதே ஆடவர் மின்னஞ்சல் வழி ஊடகங்களுக்குச் செய்தி அனுப்பியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், அதே ஆடவர் தான் தேசியக் காவல் துறைத் தலைவர் தான் ஶ்ரீ அப்துல் ஹமீட் பாடோரையும் சுட்டுக் கொலை செய்யப்போவதாகவும் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஊடகங்கள் தன்னைத் தொடர்பு கொள்ள முடியாமல் காவல் துறை செய்திருப்பதாகவும், கைப்பேசி, புலனம், கணினி ஆகியவற்றை முடக்கி இருப்ப்ப்பதாகவும் அந்த ஆடவர் தெரிவித்துள்ளார்.

