புத்ராஜெயா, திசம்பர் 3:-
நேற்று உலக வங்கி பரிந்துரைத்தது போல் பணி ஓய்வு வயதை உயர்த்த அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை.
இவ்விவகாரம் குறித்து பொதுச்சேவைத் துறையின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ முகம்மட் கைருல் அடிப் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில், பணி ஓய்வுக்கான வயதை 65ஆக உயர்த்துவதற்கு முன்பு பல கோணங்களில் சிந்தித்து பல கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இஃது உலக வங்கியின் பரிந்துரை மட்டுமே. இருப்பினும், நமது சூழலையும் நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.”
முழுதாக அப்பரிந்துரையை ஒதுக்கவில்லை. எதிர்காலத்தில் அதற்கானத் தேவை ஏற்பட்டால் நிச்சயமாக நடைமுறைப்படுத்தப் படலாம் எனவர் கூறினார்.
நாட்டின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனமாகக் கையாளும் சூழலில் இருக்கிறோம். மேலும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.
வயதாக சமூகத்தாரைக் கொண்டிருக்கும் நாடு எனும் அடிப்படையில் மலேசியாவின் பணி ஓய்வுக்கான வயது வரம்பை மறு ஆய்வுச் செய்ய வேண்டும் என அண்மையில் சில ஊடகங்கள் கூறியிருந்தன.
இந்நிலையில், தற்போது மலேசியாவில் பணி ஓய்வுக்கான வயது 60 ஆக உள்ளது.

