ஈப்போ, திசம்பர் 4:-
இன்று பேரா சட்டமன்றக் கூட்டத்தில் அம்மாநில முதல்வரும் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவருமான அகமாட் ஃபைஸால் அஸுமு மாநில மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து நம்பிக்கை ஓட்டுகளைப் பெறத் தவறினார்.
“செண்டரியாங் சட்டமன்ற உறுப்பினரான அவருக்கு ஆதரவாக 10 ஓட்டுகள் கிடைத்த நிலையில் ஏனைய 48 வாக்குகள் அவருக்கு எதிராக அமைந்தன.“
இதன் அடிப்படையில் அகமாட் ஃபைசால் அசுமு தனது முதல்வர் பதவியில் இருந்து விலகுவார்.
அம்னோவைச் சேர்ந்த பெங்காலான் பாரு சட்டமன்ற உறுப்பினர் அப்துல் மானாஃப் ஹாஷிம் கொண்டு வந்த அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு இன்று பேரா மாநிலத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்த விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தபட்டது.
நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த தெபிங் திங்கி சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் பாரி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவைத் தலைவர் முகம்மாட் ஸாஹிர் பெரும்பான்மை அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தினார். அவ்வேளை அகமாட் ஃபைசால் அசுமுவுக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.
இந்த முடிவை தாம் முழுமனது ஏற்றுக்கொள்வதாக அகமாட் ஃபைசால் அசுமு தெரிவித்தார்.
இன்று அகமாட் ஃபைசால் அசுமு பேரா மாநிலத்தின் 2021க்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது நடந்துள்ள மாற்றத்தால் அந்த பட்ஜெட் தாக்கல் அடுத்த வாரம் புதன் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பேரா மாநில சட்டமன்ற அவைத் தலைவர் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்து நடந்தவை குறித்து தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.
பேரா மாநில முதல்வரின் பதவி மாற்றமும் அதிகார ஒப்படைப்பும் சீராக நடக்க தாம் உறுதியளிப்பதாக அகமாட் ஃபைசால் அசுமு குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் பேரா மாநில சட்டமன்றக் கூட்டத்தை எதிர்வரும் 9ஆம் நாளுக்கு அவைத் தலைவர் முகம்மாட் ஸாஹிர் ஒத்திவைத்தார்.

