Site icon அநேகன்

இந்தியர்களின் உழைப்பையும் தியாகத்தையும் இழிவு படுத்தாதீர்கள் ! – மைக்கி கண்டனம்

கோலலம்பூர், திசம்பர் 4:-

கோலா கெடா தாமான் பெர்சத்துவில் அமைந்துள்ள இராஜ முனீஸ்வரர் கோவிலை அலோர் ஸ்டார் நகர மன்றத்தால் உடைக்கப்பட்டுள்ளதையும், அதை கெடா மந்திரி பெசார் நியாயப்படுத்துவதையும் மைக்கி வன்மையாக கண்டிக்கிறது.

ஆலயங்கள் சட்டப்பூர்வமானவையா இல்லையா என்பதைப் பற்றி பேசுவதற்கு முன் கெடா மந்திரி பெசார், இந்திய சமுதாயம் இந்த நாட்டிற்கு ஆற்றியுள்ள சேவையையும் வரலாற்றையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியர்கள் இந்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள். நாட்டின் மேம்பாட்டுக்கு உழைத்தவர்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இம்மாதிரியான கோவில்கள் பல கட்டபட்டுள்ளன.  மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப் படும் சமயத்தில், பல நிறுவனங்கள் மாற்று இடத்தை வழங்கியுள்ளன. ஆனால், அரசாங்க நிலமாக இருந்தும் கெடா மந்திரி பெசார் கடமை செய்ய தவறிவிட்டார்.  இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறிவிட்டார்

அந்த ஆலயம் அமைந்திருந்த இடத்தில் மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப் பட வேண்டி இருந்தால், பொறுப்புள்ள மந்திரி பெசார் மாற்று இடத்தை வழங்கி இருக்க வேண்டும். மாறாக, அந்த வழிபாட்டு தலம் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுவதை மைக்கி ஏற்க மறுக்கிறது என டத்தோ ந கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

உள்ளூர் மக்களால் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக் கோவில் தற்போது அந்த வட்டாரத்தில் சுமார் 100 இந்துக் குடும்பங்கள் வணங்கும் கோவிலாக உருவெடுத்துள்ளது.

ஓர் ஆலயத்தை வேறு இடத்திற்கு எவ்வாறு மாற்றுவது, வழிபாட்டுத் தல சிக்கலால் இந்து சமுதாயம் எத்தகைய பாதிப்பை எதிர்கொள்ளும் என்பதைப் பற்றியெல்லாம் தற்போதைய மாநில அரசாங்கத்திற்கு புரிதல் இல்லை என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது. பிரச்சனைக்கு சுமூகமான திர்வைக் காண்பதற்குப் பதிலாக, இரக்கமின்றி ஓர் ஆலயத்தை இடித்து இதன் மூலம் கெடாவில் இஸ்லாமிய ஆட்சி நடப்பதாக காட்டி அரசியல் லாபம் ஈட்ட முகம்மட் சனுசி முகம்மட் நோர் முயற்சிக்கிறார் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த 26 ஜூலை 2020அன்று மனிதவள அமைச்சரும் ம.இ.கா.வின் துணைத்தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணனும் பிரதமர் துறையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கான அமைச்சர் டத்தோ ஹாலிமா முகம்மட் சாடிக்கும் கெடா மாநில முதல்வரான முகம்மட் சனுசி முகம்மட் நோரை சந்தித்து அம்மாநிலத்தில் உள்ள இந்துக் கோவில்கள் தொடர்பாகக் கலந்துரையாடி இருந்தனர். கெடா மாநிலத்தில் கோவில் உடைப்புப் பற்றி முதலில் அவர்கள் இருவருக்கும் தெரிவிப்பதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அந்த உறுதிப்பாடு இந்துக் கோவில்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் அனைத்து வழிபாட்டுத் தளங்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியைக் கொஞ்சம் கூட மதிக்காமல் இவ்வாறு கெடா மாநில முதல்வர் நடந்து கொண்டது, மூவின மக்கள் வாழும் இந்நாட்டில் உள்ள உணர்வுகளை அவர் புரிந்துக்கொள்ள தவறிவிட்டார் என்பதையே காட்டுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தால், இக்கோவில் பிரச்சனையை ஒரு அரசியல் பிரச்சனையாக மாற்றி, ம.இ.கா. மற்றும் மற்ற அமைப்புகளையும் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கெடா மந்திரி பெசார் கேட்டுக் கொண்டிருப்பது பொருத்தமில்லாது. மாநில அரசாங்கம் இது தொடர்பாக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மைக்கி இவ்விவகாரத்தில் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் தான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவினை வழங்கும் என தெரிவித்தார்.

Exit mobile version