Site icon அநேகன்

கிணறுவெட்ட பூதம் கிளம்பியக் கதை ! பொங்கலும் சமயமும்

காஜாங் | பிப்பரவரி 17 :-

கட்டுரையாக்கம் : முனைவர் குமரன் வேலு

1. ஆதி சங்கராச்சாரியார் பிறந்த கேரளாவில் மலையாளிகள் இன்றுவரை பெரிய அளவில் ஓணம் கொண்டாடுகிறார்கள். கேரளாவைத் தவிர்த்து வட இந்தியாவில் வேறு மாநிலங்களில் யாரும் ஓணம் கொண்டாடுவதாகத் தெரியவில்லை. மலையாளிகளில் இந்துக்களும் உண்டு மற்ற சமயத்தினரும் உண்டு. இருந்தாலும் ஓணம் மலையாளிகளின் பண்பாட்டு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

2. அதுபோல தமிழர்களின் பண்பாட்டுப் பெரு விழாவாகப் பொங்கலை நாம் பார்க்கிறோம். தமிழ்நாட்டில் பொங்கல் நான்கு நாட்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உழவர்களின் திருவிழாவாகவும் இயற்கைக்கு நன்றி கூறும் விழாவாகவும் உறவினரைக் காணச்சென்று கூடிமகிழ்ந்து கொண்டாடும் விழாவாகவும் வயலில் உழவனுக்கு உதவிய ஆநிரைகளுக்கு (மாடுகள்) நன்றி பாராட்டும் விழாவாகவும், இளைஞர்கள் காளைகளை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் விழாவாகவும் (ஏறு தழுவல்) பொங்கல் திருவிழா விளங்குகிறது.

3. தைப் பொங்கலைத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாளாகவும் பார்க்கும் ஒரு பார்வை தற்காலத் தமிழ் அறிஞர்களிடையே இருப்பதும் தெளிவு. அதை மறுத்து சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்போரும் உண்டு. இந்த இரு தரப்பும் முரண்பட்டு முட்டிக் கொண்டாலும் பொங்கல் தமிழரின் பண்பாட்டு திருவிழா என்பதில் பலருக்கு உடன்பாடு உண்டு.

3. பொங்கல் தமிழரின் பண்பாட்டு திருவிழா என்பதால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் சமய வேறுபாடின்றி பொங்கலைக் கொண்டாடும் ஒற்றுமை விழாவாக நாம் பார்க்கிறோம்.

4. ஆனாலும், தமிழர்கள் தாங்கள் விரும்பும் சமய மரபுபடி இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி கூறிப் பொங்கலைக் கொண்டாடலாம். அதாவது பொங்கல் பானையில் பொங்கல் வைத்து, கரும்பைக் கட்டி (இனிப்பான விழா) “நாங்கள் தமிழர்கள், இது எங்களின் பண்பாடு” என்பதை உலகுக்குக் காட்டலாம்.

5. எனவே, பொங்கல் தமிழர் பண்பாட்டு விழா என்கின்றோம். பொங்கல் தமிழரின் ஒற்றுமைத் திருவிழா.

இதை மறுக்கிறது பொங்கலை இந்து பண்டிகை எனும் கூட்டம். இவர்கள் பொங்கல் தமிழரின் விழா அல்ல. அஃது இந்துக்களின் விழா என்று அறைகூவல் விடுக்கின்றனர். இவர்களுக்குத் தமிழை விடவும் இந்து சமயமே பெரிதாகத் தெரிகிறது.

தமிழ்ப்பண்பாடு என்று ஒன்று உண்டு என்பதை இவர்கள் ஏற்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். எல்லாம் இந்து மதம்தான் தமிழர்களுக்கு கற்றுக் கொடுத்தது, இல்லையென்றால் தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்பர் என்பது இவர்களின் எண்ணம்.

6. வட இந்தியாவிலும் மற்ற இந்திய மாநிலங்களிலும் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுவதால், பொங்கல் விழா தமிழரின் ” ஏக போக” உரிமை பெற்ற விழா அல்ல என்பது இவர்களின் வாதம். அவர்கள் இந்துக்களின் பண்டிகை என்று முத்திரைக் குத்துகின்றனர்.

7. கடந்த ஆண்டு தேசியப் பள்ளிகளிலும் இடைநிலைப்பள்ளிகளிலும் பொங்கல் கொண்டாடத் தடைவிதிக்கப் பட்டதாக நாம் அறிகிறோம். பொங்கல் ஒரு இந்து சமயவிழா என்று தலைமையாசிரியர்கள் புரிந்து கொண்டதாக நமக்குச் செய்தி எட்டியது. எனக்குத் தெரிந்த ஆசிரியர்கள் சிலர் என்னிடம் நேரிடையாக முறையிட்டனர்.
தமிழரின் பண்பாட்டு விழா ஏன் தடைசெய்யப் பட்டது என்பது குறித்து எனக்கு வருத்தம் உண்டாயிற்று.

8. எனவே, மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் பொங்கல் கையேடு ஒன்றை வெளியிடத் தீர்மானித்தது. அந்த கையேட்டில் பொங்கல் விழா ஒரு பண்பாட்டு விழா, உழவர்கள் விழா, இயற்கைக்கு நன்றி கூறும் விழா, தமிழரின் கலாச்சாரம், கலை, விழுமியம் போன்றவற்றை வெளிப்படுத்தும் விழாவென்று வலியுறுத்தி இருந்தோம். இது சமயச் சார்பற்றது. அதாவது பண்பாடு சார்ந்த விழா, சமய மரபுபடி கொண்டாடாமல் பொங்கலைக் கொண்டாடவும் தடையில்லை என்றோம். கையேடு நாடுமுழுக்க தமிழ்ப்பள்ளிகளுக்கும், தமிழ்மாணவர்கள் அதிகம் படிக்கின்ற இடைநிலைப் பள்ளிகளுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கத் தொடங்கியுள்ளோம்.

9. உடனே, இந்து மதம், சைவ சமயம் போன்றவற்றின் காவலர்களாகத் தங்களை நிலைநிறுத்தும் சமய வீரர்கள் சிலர்:

அ. இந்த கையேட்டைத் திருத்தம் செய்யச் சொல்லி, அதாவது பொங்கல் ஓர் இந்து சமய விழாவென்று மாற்றி எழுதச் சொல்லி அறிக்கை விடுக்கின்றனர். இவர்களில் சைவச் சமயப் பேரவையின் தலைவர் முனைவர் ஆறு.நாகப்பன் முதன்மையானவர். சைவமும் தமிழும் இருகண்கள் எனும் பெரியவர் முனைவர் அவர்கள், பொங்கல் சமய விழா என்கின்றார். சமயத்தில் இருந்தே பண்பாடு தோன்றியதாகக் கருத்துரைக்கின்றார்.

ஆ. சில சமய ‘மார்க்கங்கள், அந்த மார்க்கத்தை தழுவியவர்கள் சமயம் விதிக்கும் நெறிமுறைகளின் பண்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும்.

மலாய்க்காரர்கள் நோன்புப் பெருநாள் கொண்டாடுகின்றார்கள். அவர்களுக்குச் இசுலாமியச் சமயம் விதித்த நெறியான 30 நாள் நோன்பைக் கடைபிடித்து பின் அவர்கள் பெருநாள் கொண்டாடினாலும் கெத்துப்பாட், தென்னை ஓலை, போன்ற மலாய்க்காரர்களின் தனித்த பண்பாட்டையும் காட்டத் தவறுவதில்லை. உடைகூட மலாய்ப் பாரம்பரிய (baju Melayu) உடை உடுத்துகின்றனர்.

இ. அதுபோல, தமிழர்கள் தங்களின் பண்பாட்டை சமயத்துடன் கலந்து வெளிப்படுத்துவார்கள் என்பதே எனது நிலைப்பாடு.

அதாவது பண்பாடு முதலில் தோன்றி பிறகு அது சமயத்தை உள்ளிழுப்பு செய்ததாகவே நான் பார்க்கிறேன். இது என்னுடையப் பார்வை. ஏன் என்றால் இந்தியா முழுக்க பல்வேறு பண்பாடுகளும் சமய மரபுகளும் உள்ளன. ஒவ்வொரு மாநில இனத்தவருக்கும் சிறப்பு பண்பாடுகள் உண்டு. இந்து சமயத்தை அந்தந்த மாநில பண்பாட்டின்படி கடைபிடித்தனர். கோயில் கட்டும் முறையிலிருந்து விழாக்கள் வரை வேறுபாடுகள் உண்டு.

ஈ. காதுகுத்தினாலும், திருமணம் செய்தாலும், வயதுக்கு வந்து பச்சைக்குடில் இட்டு திரட்டி சுற்றுனாலும் பிறந்த நாள் கொண்டாடினாலும் இறைவனின் ஆசியை, முன்னோரின் ஆசியைத் தமிழர்கள் வேண்டுவார்கள். இது இறை அச்சத்தின் விளைவு. ஆனாலும் அவை யாவுமே தமிழரின் பண்பாட்டு சூழலில் நடைபெறும். வேறு இனத்தவரின் பண்பாட்டு சூழலிருந்து இது மாறுபடும்.

10. தமிழர்கள் ஒரு தனித்த பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்கள் என்பதை ஏற்காதவர்கள் எல்லாவற்றிற்கும் சமயச் சாயம் பூசுகின்றனர்.

பள்ளிகளில் பொங்கல் விழா தொடர்ந்து நடைபெற வேண்டும் எனும் நல்லெண்ணத்தில் ஒரு கையேட்டை தயாரித்து பொங்கல் தமிழர் பண்பாட்டு விழா, சமயச் சார்பற்ற விழா என்று அறிவுறுத்தி வெளியிட்டிருக்கும் தமிழ்மொழிக் காப்பகத்தை சாடி, அது திராவிடர்கள், நாத்திகர்கள் கைக்கு போய்விட்டதாகப் புறம்பேசுகின்றனர்.

Exit mobile version