கோலாலம்பூர், மார்ச் 13-
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும் கோலா லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சேவியர் ஜெயக்குமார் அக்கட்சியிலிருந்து விலகி நடப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது பல்வேறான சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுதீன் நாசுசன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
அவரை நீண்ட காலமாக எனக்குத் தெரியும். அந்த அடிப்படையில் அவரின் நடவடிக்கையும் செயல்களும் அவர் விலகியதற்கான காரணமும் சந்தேகத்தை எழுப்புகின்றது.
இச்சூழ்நிலையில் பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிக்ககூடாது. மன உறுதியுடன் இருக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக 1998ஆம் ஆண்டு முதல் பிகேஆர் கட்சியின் உறுப்பினராக இருந்த டாக்டர் சேவியர் இன்று அக்கட்சியிலிருந்து விலகுவதாகவும் தாம் சுயேச்சை என அறிவித்தார். அதோடு நடப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு தொடங்கி கட்சியின் நம்பிக்கை இழந்ததாகவும் தற்போது கோவிட் 19ஐ கட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு ஆதரிப்பதாகவும் சேவியர் குறிப்பிட்டார்.
முன்னதாக கடந்த மாதம் அக்கட்சியைச் சேர்த்த ஸ்டீவன் சூங், லாரி எஸ்என்ஜி ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி பிரதமர் முகீடினுக்கு ஆதரவு தருவதாக அறிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அனைத்திற்கும் பின்னணியில் அச்சுறுத்தலும் மிரட்டலும் உள்ளதாக சைபுதீன் கூறினார். முன்னதாக அண்மையில் பிகேஆர் கட்சியின் தலைமையைச் சந்தித்த சேவியர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பார்வை தம்மீது திரும்பியுள்ளதாகக் கூறினார். அதோடு தமது அரசியல் செயலாளர், தனிப்பட்ட உதவியாளர் உட்பட தமது உதவியான சிலரை அவ்வாணையம் தடுத்து வைத்துள்ளதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.
இதனிடையே மூத்த அமைச்சர் ஒருவர் சேவியரை தொடர்பு கொண்டு நடப்பு அரசாங்கத்தை ஆதரிக்கத் தவறினால் விளைவு மோசமாக இருக்குமென எச்சரித்தார் எனவும் சைபுதீன் கூறினார்.

