Site icon அநேகன்

தமிழர் தேசிய சிந்தனையாளர் சாட்டை துரைமுருகன் கைது – உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் கண்டனம்

கோலாலம்பூர் | ஜூன் 16:-

சாட்டை எனும் தலைப்பில் வலையொளி மூலமாக “சாட்டை எடுத்து நாட்டை திருத்து” என அடைமொழியுடன் தமிழர் தேசிய சிந்தனை விழிப்புணர்வை உலகத் தமிழர்களுக்கு விதைத்து வரும் அதன் நெறியாளர் துரைமுருகன் மற்றும் அவரது சகாக்கள் கைதை, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கண்டிப்பதுடன் உடனே அவர்களை தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டுமாய் கோரிக்கையும் விடுகிறது என அதன் ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்

தமிழர்களுக்கு எதிராக பின்னப்படும் அத்தனை சூழ்ச்சிகளையும் நயவஞ்சக திட்டங்களையும் தனக்கே உரிய பாணியில் தமிழர்கள் அறியும் வகையில் துள்ளியமாக அடையாளப்படுத்தி வரும் சாட்டை துரைமுருகன் கைது, தமிழர் தேசிய கருத்தியலை முடக்கும் செயலாகவும் மேலும் தமிழின எதிர்ப்பாளர்களின் திட்டமிட்ட சக்தியாகும் என்றார்

உலக தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு அவர்களை பழிப்பவர்களுக்கு பாடம் போதிக்க முயன்றது தவறா.? நேரடி வாதத்தால் தவறான புரிதல் உடையவரை நல்புரிதலுக்கு கொண்டு வந்து, காவல்துறையினர் முன்னிலையிலேயே சம்பந்தப்பட்டவர் மன்னிப்புக் கேட்டு சிக்கல் முடிவடைந்த பின்னர், மீண்டும் அந்நபரை பயன்படுத்தி அதிகார வர்க்கத்தால் பொய் வழக்குகள் மூலம் கைது செய்திருப்பது அடக்குமுறையே என்றார்

உலகத் தமிழர்களால் நேசிக்கப்படும் துரைமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரையும் தமிழ்நாடு அரசு உடனே விடுதலை செய்ய வேண்டுமென உலகத் தமிழர்கள் சார்பில் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கோரிக்கை வைக்கும் கடிதம் ஒன்றினை அனுப்ப உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்

Exit mobile version