பெட்டாலிங் ஜெயா | ஜூன் 17 :-
நாடாளுமன்றம் திறக்கப்படுவது குறித்து மாமன்னருக்கு பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் பரிந்துரைக்கத் தவறினால் அவர் பதவி விலக வேண்டும் என நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் தெரிவித்துள்ளது.
இன்றூ வெளியிட்ட ஓர் அறிக்கையில், நாடாளுமன்றம் வெகி விரைவாகத் திறக்கப்பட்டு அமர்வுகள் நடைபெற வேண்டும் என மாமன்னர் நேற்று கூறியதற்கு நம்பிக்கைக் கூட்டணி தங்களின் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டது.
நாடாளுமன்றம் மீட்டும் திறக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டாலோ அல்லது காரணங்கள் கூறப்பட்டு அது திறக்கப்படாமல் போனாலோ, பிரதமர் மாமன்னரின் கட்டளையை மீறியது மட்டும் இல்லாமல் நாட்டைத் தொடர்ந்து நிர்வகிக்க பிரதமர் நம்பிக்கை இழந்து விட்டார் எனப் பொருள்படும்.
மேலும், இதனையே பிரதமர் தொடர்ந்து செய்து வந்தால் அவர் மரியாதையுடன் தமது பதவியை விட்டு விலக வேண்டும் என அவ்வறிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வறிக்கையை, பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம், அமானா கட்சித் தலைவர் முகம்மது ஷாபு, ஜ.செ.க. கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் வெளியிட்டிருந்தனர்.
நாடாளுமன்ற வெகு விரைவில் அமர்வை நடத்த வேண்டும் என நேற்று மாமன்னர் கூறியிருந்தார்.
இருந்தாலும், மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, என்று நாடாளுமன்றம் கூடலாம் என மாமன்னருக்குப் பிரதமர் ஆலோசனை வழங்க வேண்டும்.
மக்களவை மன்றத்தின் விதிப்படி நாடாளுமன்றக் கூட்டத்திற்கு 28 நாட்களுக்கு முன்னதாக அவ்விவரம் பிரதமரால் அறிவிக்கப்பட வேண்டும்.
தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் என பிரதமர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதனிடையே. நாடாளுமன்றம் குறைந்தது செப்தெம்பபர் மாதத்தில் கூடுவதற்கான வாய்ப்பு உண்டு என பிரதமர் துறையின் அமைச்சர் (நாடாளுமன்றமும் சட்டமும்) தக்கியூடின் ஹசான் தெரிவித்தார்.

