கோலாலம்பூர் | ஜூன் 17 :-
மாமன்னரின் கட்டளை அவமதித்த பிரதமர் துறையின் அமைச்சர் (நாடாளுமன்றமும் சட்டமும்) தக்கியூடின் ஹசான் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என ஜ.செ.க. கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தமது கண்டணத்தைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் திறக்கப்பட வேண்டும் என்றுதான் மாமன்னர் கூறியுள்ளாரே தவிர அது எப்போது என குறிப்பிடப்படவில்லை என தக்கியுடின் கூறியதைத் தொடர்ந்து லிம் குவான் எங் அவ்வாறு கூறினார்.
தக்கியுடின் உடனடியாக அவர் வகித்திருக்கும் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவரது கூற்று சட்டத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதோடு மாமன்னருக்கு வெளிப்படையாகவே துரோகத்தைச் செய்திருக்கிறார். மாமன்னரும் மலாய் ஆட்சியாளர்களும் நாடாளுமன்றம் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
மாமன்னர் உடனடியாக எனக் குறிப்பிட்டதை திரித்து அது எப்போது, எந்த மாதம் நாடாளுமன்றம் திறக்கப்பட வேண்டும் என மாமன்னர் குறிப்பிடவில்லை எனக் கூறியிருப்பது தக்கியுடினின் நேர்மையற்ற நிலையையும் பொறுப்பற்றத் தனத்தையும் காட்டுகிறது என லிம் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடயே, தக்கியுடினின் அக்கூற்றுக்கு எதிராக டாங் வாங்கி மானட்டக் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாக நம்பிக்கைக் கூட்டணியின் இளைஞர் பிரிவு தலைவர் ஷாஸ்னி முனிர் கூறினார்.
நேற்று, நாடாளுமன்ற வெகு விரைவில் அமர்வை நடத்த வேண்டும் என நேற்று மாமன்னர் கூறியிருந்தார்.
இருந்த போதிலும், நேற்று இரவு சமூக ஊடகம் ஒன்றில் ஒளியேறிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தக்கியுடின், நாடாளுமன்றம் திறக்கப்பட வேண்டும் என்றுதான் மாமன்னர் கூறியுள்ளாரே தவிர அது எப்போது என குறிப்பிடப்படவில்லை என கூறியிருந்தார்.

